குழப்ப நிலையை தொடர்வதே சபாநாயகர், ஜே.வி.பியின் நோக்கம் | தினகரன்

குழப்ப நிலையை தொடர்வதே சபாநாயகர், ஜே.வி.பியின் நோக்கம்

பாராளுமன்றத்தில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையை தொடர்ந்தும் முன்னெடுப்பதே ஜே.வி.பியினதும் சபாநாயகரினதும் நோக்கமாகும். அதன் காரணமாகவே இந்த இரு சாராரும் சர்வகட்சி மாநாட்டிக்கு செல்லவில்லை என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இவர்கள் தமது குறுகிய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு செயற்படுகின்றனர் என்றும் இந்த சூழ்ச்சியின் பின்னணியின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டிய சர்வகட்சி மாநாட்டிற்கு மேற்படி இரு தரப்பும் சமுகமளிக்காமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பிரேரணையை கொண்டுவருவது மக்கள் விடுதலை முன்னணி, அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது சபாநாயகர் கரு ஜயசூரியவே. இந்த இரு சாராரும் ஜனாதிபதி கூட்டியுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு செல்லாமை தற்போதைய அரசியல் சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவராது அதனைத் தொடர்ந்தும் எடுத்துச் செல்வதே இவர்களின் நோக்கம் என்பதே தெளிவாகக் காட்டுகின்றது.

நாட்டை ஸ்தீரமற்ற நாடாகக் காட்டுவதே அவர்களின் நோக்கமாகும். இத்தகைய செயற்பாடுகளின் பின்னணியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே செயற்பட்டு வருகிறார்.

தொடரும் மோசமான அரசியல் சூழ்நிலைக்கு தீர்வொன்றை காண்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வக்கட்சி மாநாடொன்றை கூட்டியுள்ளார். இம்மாநாட்டில் பங்கேற்கும் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வொன்றுக்கு வருவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். எனினும் இந்த விவகாரத்தில் முக்கியமான தரப்பான ஜே. வி.பியும் சபாநாயகரும் சர்வகட்சி மாநாட்டிற்கு சமுகமளிக்காமை அவர்களின் குறுகிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அவர்கள் தொடர்ந்தும் செயற்படுகின்றனர் என்பதை காட்டுகின்றது.

பொதுவாகவே பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைக்கிணங்க சபாநாயகர் செயற்பட்டால் அங்கு எந்த குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு ஒரு முறையுள்ளது.

அதற்கிணங்க சபாநாயகர் செயற்படுவதில்லை. 27இன் கீழ் வரும் நிலையியற் கட்டளைச்சட்டத்தின் நியதிகளுக்கிணங்க சபாநாயகர் செயற்படுவாரானால் பிரச்சினைகளுக்கு வாய்ப்பில்லை. எனினும் சபாநாயகர் நிலையியற் கட்டளையையே அதன் மூலமான நியதிகளையோ கணக்கெடுக்காது செயற்பட்டு வருகிறார். அதுவே குழப்பகரமான நிலைமை தொடர்வதற்கு வழிவகுக்கிறது.

ஜே.வி.பியும் ஐ. தே. கட்சி பாராளுமன்றத்தில் மேற்கொண்டுவரும் சூழ்ச்சி தொடரும் நிலையில் அதற்கு முற்றிப்புள்ளி வைப்பது மேற்படி இரு சாராரினதும் விருப்பமாக அமையவில்லை. அதனைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை கூட்டியுள்ளார். மேற்படி இரு தரப்பும் அதற்கு சமுகமளிக்காமை தவறாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...