Thursday, March 28, 2024
Home » வீண் விரயத்தை தவிர்ப்போம்!

வீண் விரயத்தை தவிர்ப்போம்!

by sachintha
December 8, 2023 9:24 am 0 comment

அல்லாஹ் கூறுகிறான்… உண்ணுங்கள், பருகுங்கள். வீண்விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை. வீண்விரயம் செய்யாதே. நிச்சயமாக விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். சைத்தானோ அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவன் ஆவான்… (அல் குர்ஆன்)

நபி (ஸல்) அவர்கள், ஒருநாள் தம் மனைவி ஆயிஷா (ரழி) அவர்களின் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் ஓர் மூலையில் ரொட்டித் துண்டொன்று எறியப்பட்டுக் கிடந்ததைப் கண்டார்கள். அன்னார் அதை எடுத்து அழுக்குகளைத் தட்டி ஊதிவிட்டு அதனைச் சாப்பிட்டார்கள். பின்னர், ‘இந்த உணவானது இறைவனின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட விருந்தாளியாகும். அதனை உரிய முறையில் கண்ணியப்படுத்தாவிடில் அது திருப்பி அழைத்துக் கொள்ளப்படும். அல்லாஹ்வின் கோபத்தால் ரிஸ்க் பறிக்கப்பட்டால் அது மீண்டும் திருப்பிக் கொடுக்கப்படுவது அரிதிலும் அரிதான சிலருக்கு மாத்திரமே’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்- : ஸஹீஹூல் ஜாமிஉ)

பனூ இஸ்ரவேலர்களின் காலத்தில் ஒரு பெண் மழை காரணமாக வெளியே செல்ல முடியாததால் தன் குழந்தை கழித்த மலத்தை ரொட்டித் துண்டு ஒன்றினால் துடைத்து வீசியெறிந்தாள். அதனால் அல்லாஹ் அவ்வூருக்குப் பஞ்சத்தை இறங்கினான். இறுதியில் அப்பெண் தாங்கமுடியாத பசியினால் தான் முன்பு வீசியெறிந்த ரொட்டி துண்டின் நினைவு வந்து அதைத் தோண்டியெடுத்து அசுத்தம் நீக்கி உண்ணும் நிலையை ஏற்படுத்தினான். பின் அவள் தஃபாச் செய்ததை அடுத்து அல்லாஹ் மழையை இறங்கினான்.

(ஆதாரம்- : கிதாபஸ் ஸுஹ்த் இப்னு குதாமா).

வீண்விரயம் என்பது உணவில் மாத்திரமின்றி தேவையற்ற ஆடை அணிகலன்கள், வீட்டு மனைகளுக்கு செய்யும் தேவையற்ற ஆடம்பர செலவினங்கள், விரயமான மின்சார, தண்ணீர், எரிபொருள் பாவனைகள், இப்படி அனைத்து துறைகளிலும் காணப்படுகிறது. உலக சனத்தொகையில் மூன்றில் ஒருவர் இன்றைய காலத்தில் இரவு உணவின்றி உறங்கச் செல்கின்றனர். இது உலக உணவு அமைப்பின் தகவலாகும். விலைவாசி அதிகரிப்பால் நிறையப்பேர் தமது உணவுப்பழக்கத்தை மாற்றி எளிமையாகியுள்ளனர். பலர் கெளரவத்தை இழந்து பிச்சையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் இறைவிசுவாசிகளான முஸ்லிம்கள் ஆடம்பரத்தையும் வீண் விரயத்தையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அது அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுத் தரக்கூடியதாகும்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், நாளை மறுமையில் அல்லாஹ் ஒரு மனிதனை விசாரிக்கும் போது மனிதா! நான் உலகில் பசியினால் உன்னிடம் உணவு கேட்டேன், உடுக்க ஆடை கேட்டேன். நீயோ எனக்கு உணவோ, ஆடியோ அளிக்கவில்லையே! என்று கேட்டதும், யாஅல்லாஹ் நீயோ அகிலத்தார்க்கெல்லாம் இரட்சகனாயிற்றே உனக்கு உணவா? என்று கேட்க, ஆமாம் எனது இன்ன அடியான் உன்னிடம் பசியால் உணவு கேட்டு வந்தான். அவனுக்கு நீ பசியாற்றியிருப்பின் அங்கு என் அருளைப் பெற்றிருப்பாய் என்பான். (ஆதாரம்- : புகாரி முஸ்லிம்)

ஆகவே இஸ்லாமிய போதனைகளுக்கு அமைய உணவு உள்ளிட்ட எதுவொன்றையும் வீண் விரயம் செய்வதை தவிர்த்துக் கொள்வோம். அதன் ஊடாக அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெற்றுக்கொள்வோம்.

மௌலவி ஏ.ஜி.எம்.ஜலீல்…

(மதனி) மஃஹதுஸ் ஸூனட்னா அரபுக் கல்லூரி காத்தான்குடி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT