சுமுகமாக இயங்கும் அரச நிர்வாக இயந்திரம் | தினகரன்

சுமுகமாக இயங்கும் அரச நிர்வாக இயந்திரம்

இலங்கையில் கடந்த மாதம் 26ம் திகதி உருவெடுத்த அரசியல் பரபரப்பு இன்றுடன் இரு வாரங்கள் கடந்த போதிலும், இன்னுமே தணிந்தபாடாக இல்லை. நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு எத்தகைய தீர்வு, எப்போது ஏற்படுமென்பதும் எவருக்குமே தெரியாதிருக்கின்றது. இலங்கையின் அரசியல் களம் கடந்த இருபத்தைந்து தினங்களாக பதற்றமும், பரபரப்பும், விறுவிறுப்புமாகவே காட்சி தருகின்றது.

அதேசமயம், அரசாங்கத் தரப்புக்கும் எதிர்த் தரப்புக்குமிடையே தீவிரமடைந்திருக்கும் கடுமையான முரண்பாட்டின் விளைவுகளாக அவ்வப்போது இடம்பெற்று வருகின்ற விரும்பத்தகாத சம்பவங்களால் நாட்டின் சாதாரண பொதுமக்கள் கூட சலிப்படைந்து போயுள்ளனரென்பதை இவ்விடத்தில் குறிப்பிடாமலிருக்க முடியாது. இச்சம்பவங்களில் முக்கியமானவை கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் பாராளுமன்றத்துக்கு உள்ளே இடம்பெற்ற அசம்பாவிதங்களாகும்.

அங்கு இடம்பெற்ற மோதல்களையெல்லாம் மக்கள் ஒருவித சலிப்புடனேயே நோக்குகின்றார்கள். சர்வதேச ஊடகங்கள் கூட இலங்கைப் பாராளுமன்றத்தில் நடந்துள்ள சம்பவங்களுக்கு முன்னுரிமை அளித்திருந்தன. நாட்டின் அரசியல் பதற்றம் இவ்வாறு நீண்ட நாட்களுக்குத் தொடர்வது ஆரோக்கியமானதல்ல. இந்நெருக்கடிக்கு எவ்வாறேனும் முடிவொன்று காணப்படுவதே சிறந்ததென்று சாதாரண மக்கள் கூட அபிப்பிராயம் தெரிவிப்பதைக் காண முடிகின்றது.

பாராளுமன்ற நெருக்கடி விவகாரம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குச் சென்றுள்ள போதிலும், இந்நெருக்கடிக்கு நியாயமானதும் நிரந்தரமானதுமான தீர்வொன்றை பொதுத் தேர்தல் ஊடாகவே பெற்றுக் கொள்ள முடியுமென்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கின்றது.

2015 ஓகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்ற வேளையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்குமிடையில் இ​ணக்கப்பாடு நிலவியது. அவ்விரு தரப்பும் தனித்தனியாக பாராளுமன்ற ஆசனங்களை வென்றெடுத்த பின்னர் கூட்டாகச் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்துக் கொண்டன. அவ்விரு தரப்பினரின் கூட்டரசாங்கம் மூன்று வருடங்களும் பத்து மாதங்களும் நிறைவுற்ற நிலையில் கூட்டாட்சி குலைந்து போயுள்ளது.

இன்று அவ்விரு தரப்பினருக்குமிடையே இணக்கப்பாடு கிடையாது. அவர்கள் எதிரும்புதிருமாகப் போயுள்ளனர். அதாவது அன்றைய அரசியல் சூழல் தலைகீழாக மாற்றமடைந்து போயுள்ளது.

இவ்வாறான, தலைகீழ் மாற்றம் ஏற்படுள்ள இன்றைய நிலையில், பொதுத் தேர்தலொன்றைப் புதிதாக நடத்தி, புதியதொரு அரசாங்கத்தைத் தோற்றுவிப்பதே பொருத்தமானது என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கின்றது.

அன்றைய அரசியல் சூழல் வேறு. இன்றைய அரசியல் சூழல் வேறு...அன்றைய அரசியல் தோழமைகள் வேறு...இன்றைய அரசியல் தோழமைகள் வேறு...

அது போன்றதே மக்களின் எண்ணமும் ஆகும். அன்றைய வேறுபட்ட அரசியல் சூழலில் மக்கள் அளித்த ஆணையானது இன்றைய சூழலுக்கு முற்றிலும் பொருந்துவதாக இல்லை.

எனவே மக்களின் இன்றைய அபிப்பிராயத்தை உள்வாங்கும் வகையில் பொதுத் தேர்தலொன்றை புதிதாக நடத்தி மக்களின் இன்றைய ஆணையைக் கோருவதே பொருத்தமானது என்பதுதான் அரசியல் ஆய்வாளர்களின் எண்ணமாகும்.

மக்களின் ஆணைக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஜனநாயக ஆட்சியென்பது அரசியல்வாதிகளுக்கிடையிலான பலப்பரீட்சையின் பெறுபேற்றின் மூலம் நிறுவப்படுவதல்ல... மக்களின் ஆணையைப் பெற்றே ஜனநாயக ஆட்சி நிறுவப்படுதல் வேண்டும். எனவேதான் இன்றைய அரசியல் நெருக்கடிக்கான சரியான தீர்வு பொதுத் தேர்தலைத் தவிர வேறு எதுவுமில்லையென்பதே பலரதும் அபிப்பிராயமாக இருக்கின்றது.

இவ்வாறான அபிப்பிராயத்துக்கு மத்தியில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையுமென்பதைப் பொறுத்தே நாட்டின் அரசியலின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்க முடியும்.

அரசியல் நெருக்கடி ஒருபுறம் இருக்கட்டும்!

இன்றைய சூழலில் அரசாங்க அதிகாரிகள் அனைவரும் தங்களது கடமைப் பொறுப்புகளில் இருந்து தவறி விடாது உரியபடி பணியாற்ற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அரசியல் நெருக்கடியைப் பொருட்படுத்த வேண்டிய தேவை அரசாங்க அதிகாரிகளுக்குக் கிடையாது. அரசாங்க அதிகாரிகள் எனப்படுவோர் எந்தவொரு அரசியல் தரப்பின் பக்கமும் சாராது நடுநிலையில் நின்று கடமையாற்ற வேண்டியவர்களாவர். அவர்கள் மக்கள் பணிக்காகவே பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள். எந்தவொரு நெருக்கடி வேளையிலும் கடமைப் பொறுப்பு தவறாமல் செயற்பட வேண்டியவர்கள் அவர்கள்.

அரசியல் சூழலானது எப்போதுமே ஒரேவிதமாக இருப்பதில்லை. அரசியலென்பது மாற்றத்துக்குள்ளானபடியே தொடருகிறது. ஆனால் அரசாங்க அதிகாரிகளின் கடமைகள் என்றும் ஒரேவிதமாகவே தொடர வேண்டும்.

இன்றைய அரசியல் நெருக்கடி எவ்வாறாக இருந்த போதிலும், நாட்டின் நிர்வாக இயந்திரம் சற்றேனும் தளம்பலடைவதற்கு அரசாங்க அதிகாரிகள் இடமளிக்கலாகாது. ஏனெனில் மக்களின் எஜமானர்களே அதிகாரிகள்!


Add new comment

Or log in with...