2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு | தினகரன்

2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு

இரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும் அவரது நாணய வர்த்தக வலையமைப்பைச் சேர்ந்த மற்றொருவருக்கும் ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பூமியில் ஊழலை பரப்பியதாக குற்றங்காணப்பட்டே இவர்கள் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மரண தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் வாஹித் மஸ்லுமின் மற்றும் அவரது கூட்டாளி இருவரும் விலைகளை கையாள நாணயங்களை சேகரித்ததாக கூறப்படுகிறது.

மஸ்லுமினும், அவரது கூட்டாளிகளும் கிட்டத்தட்ட 2000 கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்ததாக ஈரான் செய்தி முகமை ஒன்று கூறியுள்ளது.

ஈரான் நாணயத்தின் மதிப்பு சரிந்துவரும் நிலையில் அந்நாட்டில் தங்க நாணயங்கள் மற்றும் அமெரிக்க டொலர்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.

அண்மையில் மீண்டும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், ஈரான் ரியாலின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக 70 வீதம் அளவுக்கு சரிந்துள்ளது.

பொருளாதார குற்றங்களை விசாரிக்க ஈரானில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் இந்த ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்ட ஏழு பேரில் மஸ்லுமினும் ஒருவராவார்.

இதில் சில விசாரணைகள் அரசுத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...