Home » காசா விவகாரத்தில் குட்டரஸ் பாதுகாப்புச் சபைக்கு அழுத்தம்

காசா விவகாரத்தில் குட்டரஸ் பாதுகாப்புச் சபைக்கு அழுத்தம்

by sachintha
December 8, 2023 9:19 am 0 comment

ஐ.நா சாசனத்தின் 99ஆவது பிரிவை செயற்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் காசா போர் தொடர்பில் செயற்படும்படி ஐ.நா பாதுகாப்புச் சபையை வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் காசா இடையில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற பாதுகாப்புச் சபை தவறிய நிலையிலேயே பொதுச் செயலாளர் இந்த அரிதான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐ.நாவின் சக்தி மிக்க அமைப்பான பாதுகாப்புச் சபை சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கு பொறுப்பாக உள்ளது.
இந்நிலையில் பாதுகாப்புச் சபை தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கும் குட்டரஸ், “இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிகளின் நிலைமை சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தற்போதுள்ள அச்சுறுத்தலை தீவிரப்படுத்தலாம்” என்று எச்சரித்துள்ளார்.
குட்டரஸ் 2017 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தது தொடக்கம் தனக்குரிய இந்த விசேட அதிகாரத்தை பயன்படுத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும். எனினும் ஐ.நா பொதுச் செயலாளர் ஒருவர் 1989 தொடக்கம் இந்த அதிகாரத்தை பயன்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குட்டரஸின் கடிதத்திற்கு பதிலளித்துள்ள பாதுகாப்புச் சபை அங்கத்துவ நாடான ஐக்கிய அரபு இராச்சியம், மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து புதிய வரைவு தீர்மானம் ஒன்றை பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்கப்போவதாக எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT