Friday, March 29, 2024
Home » இஸ்லாத்தின் நிழலில் மாணவர்களை ஒழுங்குபடுத்தல்

இஸ்லாத்தின் நிழலில் மாணவர்களை ஒழுங்குபடுத்தல்

by sachintha
December 8, 2023 6:23 am 0 comment

பரீட்சைகளின் பெறுபேறுகள் மாணவர்களில் பெரும் தாக்கம் செலுத்துவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான புரிதல்களை சமூகம் கொண்டிருப்பது முக்கியமானது. குறிப்பாக வாழ்க்கையில் சந்திக்கின்ற முதலாவது பொதுப் பரீட்சைக்கு முகம் கொடுக்கின்ற மாணவர்களை ஆற்றுப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம்.

கல்வி கற்பது முஸ்லிமான ஆண் -பெண் அனைவர் மீதும் கட்டாயக் கடமை’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இது பெரும்பாலும் எழுத வாசிக்க முடியுமாவதில் இருந்து துறைசார்ந்து கற்பது வரை விரிந்து செல்கிறது. பத்ர் யுத்தத்தின் போது பிடிப்பட்ட கைதிகளை விடுவிப்பதற்கான நிபந்தனையாக எழுத வாசிக்கத் தெரியாதவர்களுக்கு கல்வியறிவைப் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் விதித்தார்கள். இது முஸ்லிம் சமூகத்தில் கல்வியறிவில்லாதவர்கள் இருக்கக் கூடாது என்பதன் வெளிப்பாடாகும்.

இஸ்லாம் சொல்லுகின்ற கல்வி, பரீட்சைகளுக்கும் பட்டங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. கல்வி கற்றலானது பரீட்சைகள் முடிவடைவதுடன் நிறைவடைவதல்ல. இஸ்லாம் கல்வியைத் தாண்டி ஞானம் என்பதை முஸ்லிம்களுக்கு ஏவுகின்றது. கல்வி என்பது முஸ்லிம் சமூகம் இழந்து போன சொத்து, அதனை எங்கு கண்டாலும் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்- : திர்மிதி)

இந்த ஹதீஸ் கல்வியின் முக்கியத்துவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும் இங்கு ஹிக்மத் என்ற சொல்லே கல்வி என்று பிரயோகிக்கப்படுகிறது. ஹிக்மத் எனும் ஞானம் அல்லது மெய்யறிவு என்பது கல்வி பெறுவதைத் தாண்டிய ஒரு விடயமாகும். ஒட்டகம் எப்படி படைக்கப்பட்டிருக்கிறது? வானம் எப்படி உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றெல்லாம் ஆராயும்படி அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு ஏவுகின்றான். நீங்கள் சிந்திக்க வேண்டாமா? ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? என்று அவன் மனிதனைத் தூண்டுகிறான். சிந்திக்கின்றவர்களுக்கு இதில் பெரும் அத்தாட்சி இருக்கிறது என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் எடுத்தியம்பியுள்ளான். ஞானம் பெறுவதின் அடைவு ஒருவர் அல்லாஹ்வை அறிந்து கொள்ளுதல் மற்றும் அடைந்து கொள்ளுதலாகும். பரீட்சைப் பெறுபேறுகளால் பெற்றுக் கொள்ளப்படுபவற்றை விட இது மிகவும் விரிந்த பரப்பாகும். ஞானத்தைப் பெற்றுத்தராத கல்வி அறிவு மனிதனுடைய ஈடேற்றத்துக்குப் பங்களிப்புச் செய்யாது. அதனால் தான் துஆக்களில் ‘இல்மன் நாஃபிஅன்’ – பிரயோசனமான அறிவு வேண்டப்படுகிறது.

இந்த வகையில் பிரயோசனமான அறிவைப் பிள்ளைகள் பெற்றார்கள் என்பதே பிள்ளைகளைப் பெற்றோர்கள் திருப்திப்படும் விடயமாக அமைய வேண்டும். பரீட்சைப் பெறுபேறுகளின் முடிவுகளை வைத்து பிள்ளைகளின் வாழ்க்கையின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பதில் இருந்து அப்போது தான் பெற்றோர் விடுபட முடியும். ஏனெனில் ‘உங்களில் சிறந்த முறையில் செயற்படுபவர்கள் யார் என்பதைச் சோதிப்பதற்காகவே வாழ்க்கையையும் மரணத்தையும் அவன் படைத்தான்’ என ஸுரத்துல் முல்க்கில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

பொதுவாகப் பரீட்சைகள் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவைச் சோதிப்பதாக அமைந்துள்ளன. இதனையும் தாண்டி தமக்கு அமானிதமாக வழங்கப்பட்டுள்ள பிள்ளைகளின் ஈருலக வாழ்க்கையின் வெற்றிக்கான அறிவை வழங்குவது பற்றி பெற்றோர் சிந்திக்க வேண்டும்.

தொழிற்கல்வியைக் கற்றுக்கொடுக்கின்ற காலங்களில் பிள்ளைகள் மார்க்க விடயங்களில் இருந்து தூரமாவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். பரீட்சைப் பெறுபேறுகளை அடைந்து கொள்வதற்கான அதீத போட்டி மனப்பாங்கு பிள்ளைகளின் வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தடையாக அமைவது இந்நேரத்தில் கவனிக்கப்படுவதில்லை. இதனால் பரீட்சைகளுக்குப் பின்னர் பிள்ளைகளை மீண்டும் மார்க்கம் சொல்லுகின்ற வகையில் நேர்வழியில் செலுத்த முடியாத நிலைகூட ஏற்பட்டு விடுகிறது. சிறுவர்களைப் பொறுத்தவரையில் கல்வியில் அவர்களுக்கு ஊட்டப்படுகின்ற மிகை அக்கறை காரணமாக சன்மார்க்கப் போதனைகளிலும் நேர்வழிக்கான பாதைகளிலும் அவர்களின் ஆர்வம் குன்றிப்போவதை அவதானிக்க முடிகிறது.

சிறுவர்களை மார்க்கத்தின் பால் ஈடுபடுத்துவது தொடர்பில் நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டும் போது, ‘ஏழு வயது முதல் அவர்களை தொழுவதற்காக ஏவுங்கள், பத்து வயதான பின்னர் அதற்காக அடியுங்கள்’ என்று கூறியுள்ளார்கள். பிள்ளைகளிடம் மார்க்கக் கடமைகளைப் பதிய வைக்க உசிதமான வயதில் படி, படி என ஏவுவதனாலும், வகுப்பு, வகுப்பு எனத் துரத்துவதனாலும் மார்க்கம் எதிர்பார்க்கின்ற மாற்றங்களை பிள்ளைகளிடம் பதிய வைக்க முடியாமல் போகலாம். மாற்றமாக 10 வயதுக்குப் பின்னர் பரீட்சைகள் எல்லாம் முடிந்து பிள்ளைகளை மார்க்கத்தின் பால், மார்க்கம் கடமையாக்கியுள்ள தொழுகையின் பால் திசைமுகப்படுத்தும் போது அது காலாவதியான பெறுபேறுகளையே தருகிறது.

பிள்ளைகளிடம் வளருகின்ற இப்படியான மனப்பாங்கு மாற்றங்கள் முழு சமூகத்தையும் பாதித்து நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்குவதில் பாதிப்புச் செலுத்த முடியும். பரீட்சைகளில் மூழ்கியுள்ள பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது சமூகத்தின் பொறுப்பாகும். பிள்ளைகளைப் பரீட்சைகளுக்குத் தயார்படுத்தும் பொழுதே மார்க்கக் கடமைகளையும் உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்கு பெற்றோர் முன்னுரிமை வழங்க வேண்டும்.

குறித்த வயதில் அடைந்திருக்க வேண்டிய மார்க்கம் சொல்லும் பண்புகளை பிள்ளைகளிடம் ஏற்படுத்துவதற்கு அவர்களுடைய பரீட்சைகள் தடையாக இருந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பரீட்சைகள் உரிய காலத்தில் முடிந்து விடும். ஆனால் மறுமைக்கான வாழ்க்கை மரணம் வரை தொடர்வதாகும்.

அதனால் பிள்ளைகளின் பரீட்சைக் களேபரங்கள் முடிந்த கையோடு மீண்டும் அவர்களை மார்க்க வழிகாட்டுதலின் கீழ் மீட்டெடுப்பதற்கு சமூக நிறுவனங்களும் பங்களிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். குர்ஆன் மத்ரஸாவை பரீட்சைகளுக்காக நிறுத்திக் கொண்டவர்களை மீளவும் அவற்றின் பால் ஊக்குவிப்பதற்கு வழிவகைகளைக் கண்டறிந்து செயற்படுத்துவதில் சமூக நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு முதன்முறையாக பொதுப் பரீட்சையொன்றுக்கு முகம் கொடுக்கும் சிறுவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மீது திணிக்கப்பட்ட மிகைச் சுமையின் அழுத்தங்களில் இருந்து மீண்டு வருவதற்கான அவகாசங்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் சமூக நிறுவனங்களின் பணியாகும்.

பரீட்சைக்குத் தயாராகும் காலங்களிலும் பெறுபேறுகள் வந்த பின்னரும் பிள்ளைகள் மௌனமாக எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள் பின்னாட்களில் அவர்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றியமைத்திடக்கூடிய அபாயமும் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். வாழ்க்கையின் வெற்றி என்பது பரீட்சையில் சித்தியடைவது மட்டுமல்ல. அது ஒரு சிறுபகுதிதான் என்பதை பிள்ளைகளுக்கு ஆரம்பம் முதலே உணர்த்த வேண்டும். ‘ஆன்மாவைத் தூய்மைப்படுத்தியவர் வெற்றியடைந்தார், அதனைப் பாவக்கறைகளால் மூடிக் கொண்டவர் தோல்வியடைந்தார்’ எனும் அல்குர்ஆன் சொல்லும் வாழ்க்கையின் வெற்றி தோல்விக்கான அடிப்படையை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்வதும் சமூகத்தின் கடமையாகும்.

பியாஸ் முஹம்மத்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT