முக்கிய தீர்மானத்தில் குரல்வழி வாக்கெடுப்பு உசிதமற்றது | தினகரன்

முக்கிய தீர்மானத்தில் குரல்வழி வாக்கெடுப்பு உசிதமற்றது

முக்கிய தீர்மானத்தில் குரல்வழி வாக்கெடுப்பு உசிதமற்றது-President meets All Party leaders

சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி ஆலோசனை
- பாராளுமன்றில் செயற்படுவது தொடர்பில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுத்தல்
- குழப்பமின்றி செயற்படவும் முடிவு

பாராளுமன்றத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் சந்திப்பு சுமூகமான முறையில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் நாளை (19) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் சந்திப்பின்போது உரிய தீர்மானத்தை எடுப்பதற்கும் பாராளுமன்றத்தினுள் அமைதியாகவும் வன்முறையை தவிர்த்து செயற்படுவது தொடர்பிலும் அனைவரும் ஒருமைபாட்டிற்கு வந்தனர்.

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தான் ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையை பயன்படுத்தியோ வாக்கெடுப்பை நடத்த வேண்டியது அவசியமென்று ஜனாதிபதி இதன்போது அனைவரிடத்திலும் கேட்டுக்கொண்டார்.

அத்தகைய நடவடிக்கை நாட்டின் புத்திஜீவிகள், பொதுமக்கள் மற்றும் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த முறையாக அமையுமென்று தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தை மாற்றியமைப்பது போன்ற மிக முக்கிய விடயங்கள் தொடர்பில் முடிவுகளை மேற்கொள்ளும்போது நிலையியற் கட்டளைகளில் குறிப்பிட்டிருந்தபோதிலும் குரல் மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையாக அமையாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து சர்வகட்சி மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட அனைத்து தரப்பினரும் கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன், மக்கள் விடுதலை முன்னணி மாத்திரம் கலந்துரையாடலில் கலந்துகொள்ள முடியாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்ததுடன், அதை ஜனாதிபதி சபையினருக்கு தெரிவித்தார். 


Add new comment

Or log in with...