Tuesday, March 19, 2024
Home » தெற்கு காசாவில் ஹமாஸ்–இஸ்ரேலிய படைகள் தொடர்ந்தும் உக்கிர மோதல்

தெற்கு காசாவில் ஹமாஸ்–இஸ்ரேலிய படைகள் தொடர்ந்தும் உக்கிர மோதல்

by sachintha
December 8, 2023 6:18 am 0 comment

காணாமல்போனோரையும் சேர்த்து உயிரிழப்பு 21 ஆயிரத்தை தாண்டியது

தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நேற்றும் (07) கடும் மோதல் நீடித்ததோடு காசாவின் ஏனைய பகுதிகள் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடித்தன.

ஹமாஸ் பாதுகாப்பு அரணை முறியடித்த இஸ்ரேல் துருப்புகள், டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் புல்டோசர்கள் கான் யூனிஸ் நகருக்குள் ஊடுருவி இருக்கும் நிலையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அந்த நகரில் இருந்தும் வெளியேற வேண்டி ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் ஊடுருவி இருக்கும் அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேலிய துருப்புகளுடன் சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் அமைப்பு, டெலிகிராம் தளத்தில் கடந்த புதனன்று கூறியிருந்தது. கான் யூனிஸ் மற்றும் வடக்கில் உள்ள பெயித் லஹியாவில் இரண்டு டஜன் இஸ்ரேலிய இராணுவ வாகனங்களை அழித்ததாகவும் அந்த அமைப்பு கூறியது.

முன்னதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், பாதுகாப்பு அரணை துளைத்து நகரின் மையப்பகுதிக்குள் நுழைந்து 30 சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து அழித்ததாக தெரிவித்தது.

நேற்று மேலும் இரு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்திய நிலையில் அங்கு பலியாகியுள்ள இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.

ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் வீட்டை இஸ்ரேலிய படைகள் நெருங்கி இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். அந்த வீடு கான் யூனிஸில் நிலத்தடியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

1,200 பேர் கொல்லப்பட்ட இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் சின்வார் மூளையாக செயற்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. அந்தத் தாக்குதலுக்குப் பின்னர் போரை அறிவித்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை அழித்து ஒழிப்பதாக சூளுரைத்தது.

போர் வெடித்தது தொடக்கம் சின்வார் பொது வெளியில் தோன்றவில்லை என்பதோடு அவர் மற்றும் ஹமாஸ் ஆயுதப் பிரிவு தலைவர் முஹமது தெயிப் பிரதான இராணுவ இலக்குகள் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய மக்கள் தஞ்சம் அடைந்திருக்கும் தெற்கிற்கும் போர் பரவி இருப்பதால் அந்த மக்கள் தொடர்ந்தும் வெளியேறுவதற்கு இடமில்லை என்று மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.

“நாம் பெரும் அவலத்தையும் மனதளவில் சோர்வையும் சந்தித்துள்ளோம்” என்று கான் யூனிஸ் குடியிருப்பாளரான அமல் மஹ்தி குறிப்பிட்டார். “இந்த நிலைமையில் இருந்து வெளியேற எமக்கு யாராவது தீர்வு தர வேண்டும்” என்றும் கூறினார்.

இஸ்ரேல் வான், தரை மற்றும் கடல் மார்க்கமான தொடர்ந்து இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 16,000ஐ தாண்டியுள்ளது. பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

எனினும் காணாமல்போனோரும் உயிரிழந்ததாக கருதப்படும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 21,731 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு காணாமல்போனவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

வடக்கு காசாவில் பெரும்பகுதி இஸ்ரேலின் குண்டு மழையால் அழிந்திருப்பதோடு 1.9 மில்லியன் மக்கள் வெளியேறி இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

போர் வெடித்த ஆரம்பித்தில் இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவை அடுத்து பெரும்பாலானவர்கள் தெற்கில் கான் யூனிஸை நோக்கி அடைக்கலம் பெற்றனர். அவர்கள் தற்போது மேலும் தெற்காக எகிப்துடனான எல்லையை ஒட்டிய ரபா பகுதிக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

“அங்கே குண்டு தாக்குதல்கள், அழிவுகள், துண்டுப்பிரசுரங்கள் போடப்படுவது மற்றும் வெளியேற உத்தரவிட்டு தொலைபேசி அழைப்புகள் மற்றும் கான் யூனிஸை விட்டு வெளியேறுவதற்கான உத்தரவுகள் வந்த வண்ணம் உள்ளன” என்று காமிஸ் அல் தலு என்பவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். அவர் காசா நகரில் இருந்து முதலில் வெளியேறியவர்களில் ஒருவர் என்பதோடு பின்னர் கான் யூனிஸில் இருந்து ராபாவுக்கு வெளியேறியுள்ளார்.

“எங்கே போவது? இறைவனின் பொருட்டு நாம் எங்கே போக வேண்டு என்று எதிர்பார்கிறீர்கள்? நாம் கான் யூனிஸை விட்டு வெளியேறி தற்போது ரபாவில் கூடாரங்களில் இருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் இஸ்ரேலின் குண்டு வீச்சுகள் அவர்களை தொடர்ந்து வருகின்றன.

ரபாவில் குடியிருப்புப் பகுதி ஒன்றின் மீது கடந்த புதனன்று இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 17 பேர் கொல்லப்பட்டு பல டஜன் பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு கூறியது. காயமடைந்தவர்கள் உள்ளூர் குவைட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் ஜபலியாவின் வடக்கு அகதி முகாமில் இடம்பெற்ற தாக்குதலில் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் ஒருவர் தமது 22 குடும்ப உறுப்பினர்களை இழந்ததாக அந்த செய்தி நிறுவனம் கூறியது.

காசா நகரில் அல் தராஜ் பகுதியில் இருக்கும் பள்ளிவாசல் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

கான் யூனிஸில் இருந்து தெற்காக சுமார் 13 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் ரபாவில் போதுமான கூடாரங்கள் இல்லாத நிலையில் தஞ்சமடைந்த பெரும்பாலான மக்கள் திறந்த வெளியில் உறங்கி வருவதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பானது என்று கூறியுள்ள காசாவின் தெற்கு மத்தியதரைக் கடற்கையின் வெறிச்சோடிய பகுதியான அல் மவாசிக்கும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். எனினும் அங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT