பாராளுமன்றத்தினுள் நடந்தது பெரும் மிலேச்சத்தனம் | தினகரன்

பாராளுமன்றத்தினுள் நடந்தது பெரும் மிலேச்சத்தனம்

பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இன்று மிகவும் அடாவடித்தனம் நிறைந்ததாக காணப்பட்டன. நாடு மட்டுமன்றி உலகமே இலங்கைப் பாராளுமன்றத்தை திரும்பிப் பார்க்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கீழ்தரமாக செயற்பட்டார்களென ஜே.வி.பி எம்பி விஜித ஹேரத் தெரிவித்தார்.

மிளகாய்தூளை எடுத்து வந்து என் மீது வீசினார்கள். அரசியலமைப்பு புத்தகத்தை என்மீது வீசி அடித்தார்கள். அப்புத்தகம் பட்டதில் என் உதட்டில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவை மிகவும் மிலேச்சத்தனமான செய்கை.

ஜே.வி.பி எம்.பி அநுர குமார திசாநாயக்க.

பாராளுமன்றத்தில் இன்று சுதந்திரக் கட்சியின் அடியாட்களைப் போன்று செயற்பட்டனர். இவர்களின் செயற்பாடுகள் யாவும் பாதாள குழுக்களைச் சேர்ந்தவர்களைப் போன்றே காணப்பட்டது. இன்று சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே தமது ஆசனத்திலிருந்து எழுந்து நின்று கூச்சலிட்டு குழப்பத்தை உண்டு பண்ணினார்கள். ஏனைய கட்சியை சேர்ந்த எவரும் தமது ஆசனங்களை விட்டு எழுந்திருக்கவில்லை. இதனை மக்களும் அவதானித்திருப்பார்கள்.

பாராளுமன்றத்தைக் கூட்டினால் மரணம் இடம்பெறலாமென ஏற்கனவே ஜனாதிபதி கூறியிருந்தார். ஜனாதிபதியின் ஊகம் சரியென்பதுபோலவே இன்று பாராளுமன்றத்தில் அனைத்து சம்பவங்களும் இடம்பெற்றன.

பொதுஜன பெரமுன எம்.பி குமார வெல்கம.

நாம் ஆளும் கட்சியிலும் இருந்திருக்கின்றோம் எதிர்கட்சியிலும் இருந்திருக்கின்றோம். 113 ஆசனங்கள் எமக்கு இல்லையென்று தெரிந்த பின்பும் எதற்காக அதைக் கேட்டு போராட வேண்டும். இல்லையென்று தெரிந்த பின்பும் பலவந்தமாக அதனை பெற்றுக்கொள்ள போராடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

இன்று அனைத்து தூதுவர்களும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்கள். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்துக்குள் இடம்பெற்ற அடாவடித்தனமான செயற்பாடுகள் மிகவும் கவலைக்குரியவை.

சபாநாயகரால் இன்று எதையும் செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. ஆனால் அவர் செய்வாரென்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

இன்று இடம்பெற்ற அடாவடித்தனமான செயற்பாடுகள் யாவும் அவரவர்களின் தனிப்பட்ட தீர்மானங்களுக்கமையவே முன்னெடுக்கப்பட்டன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உயர் அந்தஸ்துடைய ஓர் அரசியல் தலைவர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் இதனை அனுமதித்திருப்பாரென்று நான் நம்பவி்ல்லை. அது அவருடைய நற்பெயருக்கும் ஏற்புடையதல்ல.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை சந்திப்பதே பொருத்தமான தீர்வாகும். நாம் எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுக்க தயாராக இருக்கின்றோம்.

 


Add new comment

Or log in with...