சபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் | தினகரன்

சபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

சபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றுவருகின்றது.

சபாநாயகரால் இன்று முற்பகல் 11.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமைக்கு அமைவாக குறித்த கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் (15) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது அமளிதுமளி காரணமாக இன்று (16) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் நேற்று முற்பகல் 10.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது,

அதனைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

குறித்த உரையை அடுத்து, ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி., மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் அவரது விசேட உரைக்கும் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாக அறிவித்ததோடு, அதற்கான வாக்கெடுப்பை பெயர் கூறி மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் சபையின் தீர்மானத்தை சபாநாயகர், கேட்டார்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் அமளி, துமளியில் ஆரம்பித்து, கைகலப்பு வரை சென்றது.

அதன் பின்னர் அங்கு தொடர்ந்தும் அமர்ந்திருக்க முடியாத நிலையில் சபாநாயகர் அங்கிருந்து எழுந்து சென்றார்.

அதன் பின்னர் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்றத்தை இன்று (16) பிற்பகல் 1.30 மணிக்கு கூட்டுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றையதினம் (16) ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஐ.தே.க., ஶ்ரீ.ல.மு.கா., த.மு.கூ., ஆகிய கட்சிகளின் பிரநிதிகள், த.தே.கூ. மற்றும் சபாநாயகர் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்திருந்தனர்.

இதன்போது, பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து தங்களது பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஜனாதிபதி கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தார்.

அத்துடன் நேற்று முன்தினம் (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் முதலாவது வாசகத்தினை ("அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்பட்ட, 2018 அக்டோபர் 26 ஆம் திகதியிடப்பட்ட 2094/43, 2094/43A மற்றும் 2094/44 இலக்கமிட்ட அதி விஷேட வர்த்தமானப் பத்திரிகைகள் மற்றும் அவற்றில் உள்ள ஆணைகள் மற்றும் நியமனங்கள் அரசியலமைப்புக்கு முரணானவையும் சட்டவிரோதமானவையும் மற்றும் சட்டத்திற்கு முன்பாக வெறும் வறிதானவை என்றும்" எனும் பகுதியை) நீக்குதல் மற்றும் மீண்டும் இன்று (16) அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன் அது தொடர்பான வாக்கெடுப்பை பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து மேற்கொள்ளுமாறும், கட்சித் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றம் இன்று (16) பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


Add new comment

Or log in with...