குழப்பங்களுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும் | தினகரன்

குழப்பங்களுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும்

 'தேர்தலுக்கு செல்வதுதான் ஒரே தீர்வு'

சபாநாயகர் தொடர்ந்தும் அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறி தான்தோன்றித் தனமாகச் செயற்படுவதுடன், பாராளுமன்றத்தில் இடம்பெறும் சகல குழப்பங்களுக்கும் சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கத்தியுடன் வந்த உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியே ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும், சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி பொலிஸாரின் பாதுகாப்புடன் வந்து சபையை பிழையாக வழிநடத்தியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பாராளுமன்ற குழு அறையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, சுசில் பிரேமஜயந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹெகலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

தொடர்ந்தும் பாராளுமன்றத்தைக் குழப்பத்தில் முன்னெடுக்காது மக்கள் ஆணையைப் பெறுவதற்கு தேர்தலொன்றுக்குச் செல்வதே சிறந்த தீர்வாக அமையும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதியைச் சந்தித்த ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் மற்றும் ஜே.வி.பி,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடம் பாராளுமன்ற நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக பிரேரணையை நிறைவேற்றுமாறு கூறியிருந்தார். அப்படிக் கூறியிருந்தபோதும் சபாநாயகர் மீண்டும் அரசியலமைப்பையும், நிலையியற் கட்டளைகளையும் மீறும் வகையில் செயற்பட்டுள்ளார்.

கத்தியுடன் வந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு செய்தபோதும் அவர் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. இதனாலேயே உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவதற்கு அவர்களிடம் பெரும்பான்மை இல்லை. தற்போதுள்ள அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவதாயின் உரிய முறையில், நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகவும், அரசியலமைப்புக்கு உட்பட்டும் கொண்டுவர வேண்டும். அதனைவிடுத்து தன்னிச்சையாக செயற்பட முடியாது. பாராளுமன்றத்துக்குப் பொலிஸாரை அழைத்துவருவதற்கு சபாநாயகருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

செங்கோல் உரிய இடத்தில் வைக்கப்படாது நடத்தப்பட்ட பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்புடையதல்ல என்றும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் தற்பொழுது கைப்பொம்மைபோல செயற்படும் பாராளுமன்றமாகியுள்ளது. எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் இவ்வாறான பிழைகளைத் திருத்தி நாட்டை முன்னோக்கி நகர்த்திச்செல்லும்.

சபாநாயகர் மேலும் குழப்பங்களை அதிகரிக்காது பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலொன்றுக்குச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும். மக்களுக்குரிய அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றார்.

தமக்குப் பெரும்பான்மை இருப்பதாயின், தேர்தலுக்குச் செல்லத் தயார் எனின் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியினர் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பை முடித்துக் கொண்டு வந்த ஐ.தே.மு மற்றும் ஏனைய கட்சித் தலைவர்கள் பிழையான தகவல்களையே ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு உட்பட்டு செயற்படுமாறு ஜனாதிபதி கூறியிருந்தபோது அதன்படி இவர்கள் செயற்படவில்லை என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இவ்வாறான நாளொன்றில் வெளிநாட்டுத் தூதுவர்களைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து, பார்வையாளர் கலரியில் அமரச் செய்வதற்கு சபாநாயகருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் அவருக்கு அதிகாரம் உள்ளதா எனவும் அவர் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் உச்சநீதிமன்றம் இன்னமும் தீர்ப்பை வழங்கவில்லை. இடைக்காலத் தடையுத்தரவையே வழங்கியுள்ளது என்றார்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

பாராளுமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை சட்டரீதியாக ஏற்புடையதல்ல என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஏற்கனவே நிறைவேற்றியதாகக் கூறப்படும் பிரேரணையில் முதலாவது விடயத்தை நீக்கி இதனை நிறைவேற்றியிருப்பதாகக் கூறுகின்றனர். இவ்வாறாயின் குரல் அடிப்படையாகக் கொண்டு வாக்கெடுப்பை நடத்தியிருப்பது எவ்வாறு ஏற்புடையதாகும் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது, வாளுடன் வந்தாலும் தான் கவலைப்படப்போவதில்லையெனக் கூறியுள்ளார். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகச் செயற்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தாது தேர்தலொன்றுக்குச் செல்ல இடமளிக்க வேண்டும் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 


Add new comment

Or log in with...