Friday, March 29, 2024
Home » சமூகத்தில் பாதிப்புற்றவர்களுக்கு உதவும் SriLankadhara Society தொண்டு நிறுவனம்

சமூகத்தில் பாதிப்புற்றவர்களுக்கு உதவும் SriLankadhara Society தொண்டு நிறுவனம்

by sachintha
December 8, 2023 6:00 am 0 comment

மனிதாபிமானப் பணிகளைத் தொடர்வதற்காக பங்களிப்புகளை எதிர்பார்க்கின்றது

1922ம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கையின் மிகப் பழமையான மனிதாபிமான தொண்டு நிறுவனங்களில் ஒன்றான Sri Lankadhara Society Ltd., இலங்கையின் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அர்ப்பணிப்பான சேவையின் நூற்றாண்டு மைல்கல்லை எட்டியுள்ளது. அமரர் Dr. W. A. De Silva அவர்களாலும் அவரது மனைவி Catherine இனாலும் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், காலனித்துவ ஆட்சிக்காலத்தில் ஆதரவற்ற பௌத்த சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்கி, அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு அவசியமான திறன்களையும் பயிற்றுவித்தது.

அதனைத் தொடர்ந்து இந்தக் கழகமானது வசதியற்ற பிள்ளைகளுக்கான முன்பள்ளி ஒன்றையும், முதியவர்களுக்கான பராமரிப்பு நிலையமொன்றையும் ஆரம்பித்ததன் மூலம் தனது மனிதாபிமான சேவைகளை விஸ்தரித்தது.

Dr. De Silva பன்முக ஆளுமை கொண்டவராவார். அவர் 16 வருடங்களாக சட்டவாக்க சபையின் அங்கத்தவராகவும், 6 வருடங்களாக அரசாங்க அமைச்சராகவும், அரச மிருக வைத்திய நிபுணராகவும், விவசாயத்துறை முன்னோடியாகவும், சிறந்த வள்ளலாகவும், பௌத்தராகவும், சில பத்திரிகைகளின் பதிப்பாசிரியராகவும், வெளியீட்டாளராகவும், நிறுவகராகவும், பௌத்தம் மற்றும் சிங்கள மொழி, இலக்கியம் கலாசாரம் சார்ந்த பல வெளியீடுகளின் புத்திஜீவியாகவும், நாட்டுப் பற்றாளராகவும், சுதந்திரப் போராளியாகவும், பல பணிகளை ஆற்றியவர் ஆவார். காலனித்துவ ஆட்சியின் இறுதி யுகத்தில் இடம்பெற்ற தேசிய போராட்டங்களில் இவர் வழங்கிய பங்களிப்பானது எமது நாட்டின் சமூக-அரசியல், சமய, கலாசார வாழ்வியலில் மிக ஆழமான தாக்கங்களைச் செலுத்தியது.

Dr. W. A. De Silva அவர்களின் மெச்சத்தக்க செயற்பாடுகள் அனைத்திற்கும் அவரது மனைவி Catherine வழங்கிய முழுமையான ஒத்துழைப்பே காரணமாகும். மொரட்டுவையைச் சேர்ந்த முதலியார் சைமன் பெர்ணாண்டோ சிறீ சந்திரசேகர அவர்களின் மகளான முத்துதந்திரிகே கதரீன் டீ சில்வா, தனது சொத்துக்களை தனது கணவனின் உன்னத நோக்கத்துக்காக செலவளித்தார்.

தனது தேசத்தின் நலிவடைந்த, ஒதுக்கப்பட்ட கிராமியப் பெண்களை உயர்த்துதல் என்ற தனது நோக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக Dr. De Silva அவர்கள் 95 W. A. Silva மாவத்தை, வெள்ளவத்தை, கொழும்பு – 06 இல் சில ஏக்கர்களில் அமைந்த காணியொன்றில் நவீன வசதிகளைக் கொண்ட மனை ஒன்றை அமைத்தார். இந்த மனையில் தற்போது Dr. & Mrs. W. A. De Silva தம்பதியினரால் முதன்முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமூக சேவை நிறுவனமான The Sri Lankadhara Society Ltd. என்ற பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் அமைந்துள்ளது. Sri Lankadhara Society இனைத் தாபித்தலானது, நவீன இறைமை மிக்க தேசத்தை உருவாக்குதல் என்ற Dr. De Silva அவர்களின் தூரநோக்கின் ஒரு விஸ்தரிப்பாகவே கருதப்படுகின்றது. இதன் முதல் செயற்றிட்டமாக Sri Lankadhara சிறுமிகள் இல்லத்தை அவர்கள் தமது சொந்த செலவில் ஆரம்பித்தனர். அதன் நோக்கங்கள் சிறுமிகள், பெண்களுக்கிடையே கல்வியை ஊக்கப்படுத்துதல்,

அநாதரவான சிறுவர்களுக்கான இல்லத்தை வழங்குதல், பொருத்தமான கைத்தொழில் துறைகளுக்கு பெண்களைப் பயிற்றுவிப்பதற்கான நிறுவனங்களைப் பராமரித்தல் போன்றனவாகும்.

Sri Lankadhara Society ஆனது தேர்வு செய்யப்பட்ட தலைவர், உப தலைவர், இணை செயலாளர்கள், இணைப் பொருளாளர்கள், அங்கத்தவர்கள் ஆகிய மனமுவந்து சேவையாற்றுவோரை உள்ளடக்கிய குழுவால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அன்று தொட்டு இந்தக் கழகமானது ஒவ்வொரு குழுவினரதும் வழிகாட்டுதலின் அடிப்படையில் தனது மனிதாபிமான சேவைகளை விரிவுபடுத்தி தமது நிறுவுனர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்றும் பாதையில் பயணிக்கின்றது. இந்தக் கழகத்தின் தற்போதைய சேவைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

பெண்கள் இல்லம், சிறுவர் இல்லம், முதியோர் இல்லம், முன்பள்ளி, முதியோர் பராமரிப்பு நிலையம். –

தனது மனிதாபிமான சேவைகளை மேலும் விஸ்தரிக்கும் முகமாக Sri Lankadhara Societyஆனது 1967ம் ஆண்டில் ஒரு முதியோர் இல்லத்தை அமைத்தது. தற்போது இந்த இல்லம் 18 முதிய பெண்களுக்கான அன்பையும் அரவணைப்பையும் வழங்குகின்றது. முதியோர் இல்லத்தின் நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கழகத்தினால் 5 முழுநேர ஊழியர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

1971ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Sri Lankadhara Society இன் சிறுவர் இல்லமானது திறம்பட இயங்கி வருகின்றது.

1980ம் ஆண்டு முதல் 5 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கான முன்பள்ளி மற்றும் நாள் பராமரிப்பு நிலையமொன்று இயங்கி வருகின்றது.

கொவிட் தொற்றுநோயின் பின்னர் சுகாதார அதிகாரிகளின் பணிப்புரையின் பேரில் முதியவர்களை நாள் பராமரிப்புக்காக இல்லத்தினுள் அனுமதித்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த சேவையை மீண்டும் தொடருவதற்கான நாளை இந்தக் கழகம் எதிர்பார்த்துள்ளது.

இத்துணை வருடங்களாகவும் தாம் வழங்கும் மனிதாபிமான சேவைகளை உயர்ந்த தரத்தில் பேணுதலானது இந்தக் கழகத்திற்கு மிகவும் சவாலான விடயமாகவே இருந்து வந்துள்ளது. அதிகரித்து வரும் பொருட்களின் விலைகளுக்குக் கட்டுப்படியாகாத வகையில் அரசாங்கம் வழங்கும் உதவித்தொகையானது மிகச் சொற்ப அளவினதாக இருப்பதால் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே தற்போது பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்கு, இந்தக் கழகத்திற்குப் பல நபர்கள், நிறுவனங்கள், தனியார் துறைகள், சமூக சேவை நிறுவனங்கள் பண உதவிகளையும், பொருள் உதவிகளையும் செய்து வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் எமது கழகத்தின் தோற்றம் முதல் இன்றுவரை எமது மனிதாபிமான சேவைகளை நிறைவேற்றுவதற்குப் பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்களுடைய பங்களிப்பானது எமது சிறுவர்கள், பெண்கள், முதியவர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும் உதவியையும் வழங்கி அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் துணைபுரியும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT