பாராளுமன்றில் நேற்றும் குழப்பம் | தினகரன்

பாராளுமன்றில் நேற்றும் குழப்பம்

 சபைக்குள் பொலிஸார் குவிப்பு
 புத்தகங்களை வீசி எறிந்து கூச்சல்
 கத்தியுடன் வந்தவரை கைது செய்யுமாறு கோஷம்

பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் குழப்பம் நீடித்தது. பொலிஸார் புடைசூழ செங்கோலுடன் சபைக்குள் நுழைந்த சபாநாயகர், கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

கடந்த 14ஆம் திகதி தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது.

எனினும், இது அரசியலமைப்புக்கோ அல்லது பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு உட்பட்டதாகவோ இல்லையென்பதால் மீண்டும் ஒரு பிரேரணையை சட்டத்துக்கு உட்பட்டதாகவும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு உட்பட்டதாகவும் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைய நேற்றைய தினம் பாராளுமன்றம் கூடியது. பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற கலரியில், கட்சி ஆதரவாளர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், ஊடகவியலாளர்களால் நிரம்பியிருந்தது. சபை கூடுவதற்கு முன்னர் சுமார் ஒரு மணியளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சபைக்குள் நுழைந்ததுடன், அருந்திக பெர்னா ண்டோ எம்பி சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். அவரைச் சூழ ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் சுமார் 15 பேரளவில் ஆதரவாக நின்றுகொண்டிருந்தனர். நேற்று முன்தினம் சபைக்குள் கத்தியுடன் நுழைந்து அச்சுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவை கைதுசெய்யுமாறு கோரி கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் நின்றிருந்தனர்.

இவர்கள் கோஷமெழுப்பிக்கொண்டிருக்க ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் நுழைந்துகொண்டிருந்தனர். எதிர்க்கட்சி ஆசனங்கள் முழுமையாக நிறைந்திருந்தன. பிற்பகல் 1.25 மணிக்கு சபை கூடுவதற்கான கோரம் ஒலிக்க ஆரம்பித்தது. 1.30 மணியாகியும் சபாநாயகரோ அல்லது செங்கோலோ சபைக்குள் கொண்டுவரப்படவில்லை. சபாநாயகரின் ஆசனத்தைச் சூழ விருந்த உறுப்பினர்கள் தொடர்ந்தும் ​கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். 'கைது செய், கைதுசெய் ஆயுதம் கொண்டுவந்தவரை கைதுசெய்' என அவர்கள் கோஷம் எழுப்பியதுடன், பதாகைகளையும் தாங்கிக்கொண்டிருந்தனர். 1.30 மணி தாண்டியும் கோரம் ஒலித்துக்கொண்டிருந்தது.

எதிர்க்கட்சித் தரப்பிலிருந்த உறுப்பினர்கள் தொடர்ந்தும் தமது ஆசனங்களிலிருந்து போராட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சபைநடுவில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையே எதிர்த்தரப்பினர் பக்கத்திலிருந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் ஒருவருடன் ஒருவர் பேசுவதுடன், அடிக்கடி வெளியே சென்று வந்துகொண்டிருந்தனர். பிற்பகல் 2 மணியைத் தாண்டியும் கோரம் ஒலித்துக்கொண்டிருக்க சபாநாயகர் சபைக்குள் நுழையவில்லை. 2.10 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம சபைக்குள் நுழைந்ததுடன் தமது தரப்பிலிருந்த உறுப்பினர்கள் அனைவரையும் ஆசனங்களில் அமருமாறு சைகைசெய்துகொண்டே வந்தார். இதனைத் தொடர்ந்து எதிர்த்தரப்பிலிருந்த உறுப்பினர்கள் சகலரும் ஆசனங்களில் அமர்ந்தனர்.

பொலிஸ் பாதுகாப்புடன் வந்த சபாநாயகர்

பிற்பகல் 2.15 மணியளவில் எதிரணித்தரப்பில் உள்ள கதவு திறக்கப்பட்டது. சபை உதவியாளர் இருவர் ஆசனமொன்றை சுமந்தவாறு சபைக்குள் நுழைந்தனர். அவர்கள் ஆசனத்தை சபாநாயகர் ஆசனம் இருக்கும் பகுதியை நோக்கி எடுத்துச் சென்றபோது, பொலிஸார் தமது கைகளைக்கோர்த்து மனித சங்கிலியை உருவாக்கி சபைக்குள் நுழைந்தனர். பொலிஸாரின் மனித சங்கிலிக்கு நடுவில் சபாநாயகரும், செங்கோலுடன் படைக்கலசேவிதரும் அழைத்துவரப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி வந்ததுடன், சபை உதவியாளர்கள் கொண்டுவந்த கதிரையை பறித்து பொலிஸார் சூழவந்த சபாநாயகரை நோக்கி வீசினர். எனினும், பாதுகாப்புக்கு வந்த பொலிஸார் தமது கைகளால் கதிரையைத் தடுத்தனர்.

சபைக்குள் நுழைந்த சபாநாயகர் எதிர்த்தரப்பு பக்கத்தில் சபை உதவியாளர்கள் அமரும் ஆசனத்தில் அமர்ந்தார். அவரைச் சுற்றி பொலிஸார் மனித சங்கிலித்தொடராக பாதுகாப்புக்கு நின்றனர். படைக்கல சேவிதர் செங்கோலை கையில் ஏந்தியவாறு நின்றார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி புத்தகங்களால் வீசினர். பாதுகாப்புக்கு நின்ற பொலிஸார் அவற்றைத் தடுத்ததுடன், சில புத்தகங்கள் பொலிஸாரின் மீதும் பட்டன. அது மாத்திரமன்றி எதிர்த்தரப்பிலிருந்த எம்பிக்கள் மீதும் பாரிய புத்தகங்கள் வீசப்பட்டன. ஆர்ப்பாட்டம் செய்த உறுப்பினர்களின் பக்கத்திலிருந்து சப்பாத்துக்களும் வீசப்பட்டன.

குழப்பங்களுக்கு மத்தியில் எப்.எம். மைக்கின் உதவியுடன் சபாநாயகர் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். நிலையியற் கட்டளைகளை ஒத்திவைப்பதற்கான யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்தார். சபையில் காணப்பட்ட கூச்சல்களுக்கும் மத்தியில் அவர் யோசனையை முன்வைத்தார். அதனை ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வழிமொழிந்தார். அதனைத் தொடர்ந்து தற்போதைய அரசாங்கத்தை நீக்குவதற்கான யோசனையை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க முன்மொழிந்தார். அதனை விஜித ஹேரத் வழிமொழிந்தார். இதற்கு பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகர் எப்.எம் மைக்கை பயன்படுத்திக் கூறினார். எனினும் சபையில் காணப்படும் சூழ்நிலையால் பெயர்குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்த முடியாது என்பதால் கண்ணால் பார்ப்பதையும் கேட்பதையும் அடிப்படையாகக் கொண்டு வாக்கெடுப்பு நடத்துவதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து எதிர்த்தரப்பிலிருந்த உறுப்பினர்கள் அனைவரும் ஆசனங்களிலிருந்து கைகளை உயர்த்தி ஆதரிப்பதாகக் குரல் எழுப்பினர். குறித்த பிரேரணையை எதிர்ப்பவர்கள் தெரிவிக்கமுடியும் எனக் கூறியபோது எவரும் கைகளை உயர்த்தவில்லை.

ஆளும் தரப்பிலிருந்தவர்களும், சபாநாயகரின் ஆசனத்தைச் சூழநின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களும் தொடர்ந்தும் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததுடன், சபாநாயகரின் மேசையிலிருந்த மற்றும் செயலாளர்களின் மேசைகளிலிருந்த புத்தகங்களை எடுத்து எதிர்த்தப்பிலிருந்த உறுப்பினர்கள் மீதும் பொலிஸார் மீதும் வீசிக்கொண்டிருந்தனர். குழப்பங்களுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றுவதாக அறிவித்த சபாநாயகர் எதிர்வரும் 19ஆம் திகதி 1 மணிக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

சபையை ஒத்திவைத்த சபாநாயகர் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேறினார். எதிர்க்கட்சியிலிருந்தவர்கள் பாரிய கூச்சலிட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் மீதான புத்தக வீச்சுக்கள் தொடர்ந்துகொண்டிருந்தன. தண்ணீர் போத்தல்களிலிருந்து தண்ணீரும் வீசி அடிக்கப்பட்டது. எதிரணியினர் கூச்சலிட சபையின் பார்வையாளர் கலரியிலிருந்த கட்சி ஆதரவாளர்களும் குரல் எழுப்பியதைக் காணக்கூடியதாகவிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா கண்களை மூடிக்கொண்டு அழைத்துச் செல்லப்படுவதைக் காணக்கூடியதாகவிருந்ததுடன், விஜித ஹேரத் எம்பியின் மேற்சட்டையின் பின்பக்கத்தில் மண்ணிறமான திரவம் படிந்திருந்ததையும் காணக்கூடியதாவிருந்தது. எதிரணி எம்பிக்கள் கூச்சலிட்டவாறு வெளியேறிச் செல்ல ஆளும் தரப்பிலிருந்த உறுப்பினர்கள் சிலர் செங்கோல் வைக்கும் மேசையைப் புரட்டினர்.

சிறிது நேரத்தில் உறுப்பினர்கள் ஒருவர் ஒருவராக வெளியேறிச் சென்றனர். சபையில் புத்தகங்கள் சிதறிக்கிடந்ததுடன், சிதறிக்கிடந்த புத்தகங்களை சேகரிக்கும் பணியில் சபை உதவியாளர்கள் சிலர் ஈடுபட்டதைக் காணக்கூடியதாகவிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெேரரா மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் மீது தம்மீது மிளகாய்த்தூள் தாக்குதல் நடத்தப்பட்டதாக பின்னர் அறியக்கிடைத்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்ததுடன், பாராளுமன்ற மருந்தகத்தில் அவர்களுக்கு மருந்துகட்டப்பட்டிருந்தது.

மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...