மக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்! | தினகரன்

மக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்!

பாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில் அமைதியையும், ஜனநாயகத்தையும் பேணி நிலையியல் கட்டளைகளை மதித்து, பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருதரப்பினரும் இந்தப் பிரச்சினையை ஜனநாயக வழியில் தீர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டிருக்கின்றார். தம்மைச் சந்தித்த சபாநாயகர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐ. தே. முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான சூழல் ஏற்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

நாகரிகமில்லாத வகையில் பாராளுமன்றத்தில் நடந்துகொள்வது ஆரோக்கியமானதல்ல. உலகத்தில் பாராளுமன்ற சம்பிரதாயம், பாராளுமன்ற ஜனநாயகத்தை மதித்துச் செயற்படும் பெருமையைப் பெற்றுக்கொண்ட ஒரு நாடாக எமது நாடு நீண்ட காலமாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்தப் பண்பாட்டினை, ஜனநாயகத்தை தொடர்ந்தும் நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கட்சி அரசியலுக்குள் முடங்கிக்கொண்டிராமல் நாடு, மக்கள் என்ற சிந்தனையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் உணர்ந்து செயற்பட வேண்டும். இத்தகைய பரந்துபட்ட சிந்தனை ஏற்படுவதன் மூலமே நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

சகல சந்தர்ப்பங்களிலும் பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்குப் பாதகமில்லாமல் அதற்குரிய கௌரவத்தை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கின்றார். அதே சமயம் ஜனநாயக அரசியல் சக்திகள் ஜனநாயக அரசியல் பண்பாட்டினை பேணுவதற்கும், மதிப்பளிப்பதற்கும் கடமைப்பட்டிருப்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்தசில தினங்களில் பாராளுமன்றில் இடம்பெறும் அநாகரிகச் செயற்பாடுகளை எந்தவகையிலும் அங்கீகரிக்க முடியாது. பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு இழுக்கைத் தேடிக்கொடுப்பதாகவே இதனைக்கொள்ள முடிகிறது.

கடந்த 26 ஆம் திகதிக்குப் பின்னர் நடந்தேறிக்கொண்டிருக்கும் சம்பவங்கள் முழு நாட்டையும் அபகீர்த்திக்குள்ளாக்கியுள்ளது. நாட்டு மக்கள் பெரும் கவலையும் அதிருப்தியும் கொண்டிருக்கின்றனர். உலகம் எம்மை நோக்கி அதன் பார்வையை திருப்பியிருக்கின்றது. பாராளுமன்ற ஜனநாயகத்துக்கும், நிலையியல் கட்டளைகளுக்கும் சவால் விடுக்கப்பட்டிருப்பதையே காண முடிகிறது. இது ஜனநாயக பண்பாட்டியலுக்கு ஆரோக்கியமானதல்ல என்பதை மறந்துவிடக்கூடாது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலொன்றை நடத்துவதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமெனவும் இதனை மக்கள் தீர்ப்புக்கு விடுவதே சிறப்பானது எனத் தெரிவித்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருப்பது ஆரோக்கியமானதொன்றாகும். இது வரவேற்கக்கூடியதுமாகும். பிரச்சினையை பாராளுமன்றத்துக்குள் தீர்த்துக்கொள்ள முடியாது போனால் மக்கள் மன்றுக்குச் செல்வதன் மூலம் சுமுகமாக தீர்த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தேர்தலொன்றை நடத்துவதைத் தவிர பிரச்சினைக்கு மாற்றுவழி கிடையாதென்பதை வலியுறுத்திக்கூறியுள்ளது.

அதேநேரம் ஜனாதிபதி தேர்தலையும், பாராளுமன்றத் தேர்தலையும் சமகாலத்தில் நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி இணக்கம் தெரிவித்திருக்கின்றது. எதிரும் புதிருமான இரண்டு கட்சிகளின் தலைமைத்துவங்கள் ஒரே கருத்தை முன்வைத்திருக்கின்ற நிலையில் பாராளுமன்றத்துக்குள் முட்டி மோதிக்கொண்டிருப்பதை விட தேர்தலுக்குச் செல்வது சிறப்பானதாகக் கருதமுடிகிறது. இரண்டு பிரதான கட்சிகளும் அதன் தலைவர்களின் கருத்து ஒரே விதமாகக் காணப்படுகின்ற நிலையில் நாட்டின் தலைமை அதனைக் கவனத்தில் கொள்வது அவசியமெனக் கருதுகின்றோம்.

அதேசமயம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யும் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் தேர்தலுக்குச் செல்வதையே விரும்புகின்றது. பாராளுமன்றத்தில் 225 மக்கள் பிரதிநிதிகளின் தலைகளை வைத்து தடுமாறுவதைவிட மக்கள் தீர்ப்புக்கு விடுவதே சிறப்பானதென ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது. அரசியல் யாப்புக்கமைய பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையின் மூலம் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்வதன் மூலம் நாடு எதிர்கொண்டிருக்கும் சவாலை முறியடிக்க முடியும். பாராளுமன்றில் முட்டிமோதிக்கொண்டிருப்பதால் அந்த உயர் சபையின் நற்பெயருக்கு பெரும் களங்கத்தையே நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதை மறக்கக் கூடாது.

தேர்தலொன்றின் போது மக்கள் வழங்கும் தீர்ப்பு நியாயமானதாகவே அமையும். மக்கள் தங்களது பிரதிநிதியை தெரிவுசெய்து ஜனநாயக பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு புதிய பாதையை திறந்துவிடலாம். நாட்டையும், நாட்டு மக்களையும் பற்றிய சிந்தனைப் போக்குடன் நாம் செயற்படும் போது எமக்கிடையேயான குறுகிய நோக்கங்கள் இல்லாதொழிந்து போகலாம். கடந்த 26 ஆம் திகதி முதல் இன்று வரையில் நாடு அரசியல் ஸ்திரத்தன்மையை இழந்து காணப்படுகின்றது. இதன் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்கத் தவறியுள்ளோம்.

மக்களை எதிரும் புதிருமாக அணி திரட்டி கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டங்களிலீடுபடுத்துவதால் எதுவித பயனும் கிட்டப் போவதில்லை. கருத்தொருமித்துச் செயற்பட்டால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும். ஜனநாயக பாரம்பரியம் மிக்க நாட்டில் ஜனநாயக மீறல்கள் தொடர்வது விசனிக்கத் தக்கதாகும். உலகம் ஒவ்வொரு கணத்திலும் எம்மைப் பார்த்துக்கொண்டிருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஜனநாயக பண்புகளை உத்தரவாதப்படுத்துவதனூடாகவே நாட்டின் கீர்த்தியை, பெருமையை பேணக்கூடியதாக இருக்கும்.

அரசியல் கட்சிகளின் பலத்தைவிடவும் மக்களின் பலமே வலிமைமிக்கதாக அமையும். மக்கள் விருப்பு என்னவென்பதை கண்டறிய வேண்டிய தருணம் இது. எனவே சரியான வழி தேர்தலுக்கு முகம் கொடுப்பதேயாகும். மக்கள் தீர்ப்பில் நம்பிக்கை வைத்து அந்தப் பாதையின் பக்கம் திரும்புவதே தகுந்ததாகும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாடு வலியை சுமக்கும் நிலையே உருவாகும் என்பதை மனதில் பதித்து செயற்படுவோம்.


Add new comment

Or log in with...