பாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு | தினகரன்

பாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு

மஹிந்த ராஜபக்ஷ விசேட உரை
எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

இன்று நள்ளிரவு (16) முதல் எரிபொருள் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது ஏற்பட்ட அமளி துமளியை அடுத்து, பாராளுமன்றம் நாளை (16) பிற்பகல் 1.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கூடியது
பாராளுமன்றம் இன்று (15) முற்பகல் 10.00 மணிக்கு கூடியது, இதனைத் தொடர்ந்து சபாநாயகர் வழமைபோன்று அறிவிப்பை மேற்கொண்டார்.

சபாநாயகர் அறிவிப்பு
அதில், நேற்றையதினம் (14) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு அது 122 பாராளுமன்ற உறுப்பினர்களினால் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை செல்லுபடியற்றது என தெரிவித்தார்.

அத்துடன் அனைவரும் நேற்றைய தினம் (14) பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்த வகையில் அமர்ந்திருக்கலாம் எனவும் அவர் இதன்போது அறிவித்தார்.

அதன் பின், மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களை உரையாற்றுமாறு அனுமதியளித்தார்.

தினேஷ் குணவர்தன ஒழுங்குப் பிரச்சினை
அதனையடுத்து, ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த தினேஷ் குணவர்தன எம்.பி., சபாநாயகரின் முடிவை ஏற்க முடியாது என, ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை வாசிக்குமாறு தெரிவித்தார். ஆயினும் அதற்கான பதிலுடன் தான் அதனை வாசிக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

ஆயினும் தினேஷ் குணவர்தன எம்.பி., ஜனாதிபதியினால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை தொடர்ந்தும் வாசிக்க முற்பட்டார். அதற்கு மறுப்புத் தெரிவித்த, மஹிந்த ராஜபக்ஷவை உரையாற்றுவதற்கு விடுமாறு சபாநாயகர், தெரிவித்தார்.

அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

மஹிந்த ராஜபக்‌ஷ விசேட உரை
அதில், ஜனாதிபதி அவர்கள் தன்னை பிரதமராக்கியது, அரசியலமைப்புக்கு இணங்கவாகும் என சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பாராளுமன்றத்தில் தற்போது நிலவும் குழப்பகரமான நிலையை நிறைவுக்கு கொண்டுவரும் பொருட்டு, தேர்தலுக்கு செல்லவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

குறித்த உரையின்போது, நாட்டில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், மத்திய வங்கி மோசடி என்பன இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இன்று நள்ளிரவு (16) முதல் எரிபொருள் விலையை மேலும் குறைக்க தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தான் பிரதமர் பதவியில் தொங்கிக் கொண்டிருக்கும் அளவுக்கு பதவிப் பேராசை கொண்டவன் அல்ல எனத் தெரிவித்ததோடு, பாராளுமன்றத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலையை, தான் தனது வாழ்நாளில் சந்தித்ததில்லை எனவும் தெரிவித்தார்.

இப்பதவி தனக்கு புதிதல்ல எனத் தெரிவித்த அவர், அவருக்குத்தான் அது பெரிது எனக்கல்ல எனவும் தெரிவித்ததோடு, தான் ஜனாதிபதி பதவி, பிரதமர் பதவியிலெல்லாம் இருந்தவன் என தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
குறித்த உரையை அடுத்து, ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி., மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் அவரது விசேட உரைக்கும் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாக அறிவித்ததோடு, அதற்கான வாக்கெடுப்பை பெயர் கூறி மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

சபையில் அமளி துமளி
அதனைத் தொடர்ந்து, தன்னால் இது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என தெரிவித்த சபாநாயகர், இது தொடர்பில் சபையே தீர்மானம் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்ததோடு, அதற்கு இணங்குகிறீர்களா என கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அருகில் திலங்க சுமதிபால வந்ததை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு எம்.பிக்கள் சபாநாயகரின் ஆசனத்தை சூழ ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து, ஐ.தே.க. எம்பிக்கள் சபாநாயகரை பாதுகாக்கும் வகையில் அவரை சூழ்ந்து நின்றனர்.

திலும் அமுனுகம காயம்
குறித்த அமளி துமளிக்கு நடுவில், சபாநாயகர் பாரளுளுமன்றத்தை ஒத்தி வைக்காமல், தொடர்ந்தும் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

இவ்வேளையில், மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட சிலர் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறினர். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, ரணில் விக்ரமசிங்கவும் அங்கிருந்து வெளியேறினார்.

இதன்போது, சபாநாயகரின் ஒலிவாங்கியை பறிக்க முயற்சி செய்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவுக்கு கையில் காயமேற்பட்டது.

இதன்போது, சபாநாயகர் மீது குப்பை கூடைகள் வீசப்பட்டது, அதனை ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுத்த நிலையில், மேலும் அங்கு அமர்ந்திருக்க முடியாத நிலையில் சபாநாயகர் அங்கிருந்து எழும்பிச் சென்றார்.

இதன்போது, சபாநாயகரின் இருக்கையை நோக்கி பல்வேறு பொருட்கள் வீசப்பட்டது.

பாராளுமன்றம் ஒத்திவைப்பு; நாளை கூடும்
அதன் பின்னர். சபாநாயகர் தலைமையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தை அடுத்து, பாராளுமன்றத்தை நாளை (16) பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் கூட்டுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கு முன்னர், பாராளுமன்றம் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...