அருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு | தினகரன்

அருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு

எமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற அருகாமை வேற்றுக் கிரகங்கள் உயிர்கள் வாழ சாத்தியம் பற்றி தேடுதல்களில் ஈடுபட பிரதானமாக கருதப்படுகின்றன.

பூமியை விடவும் மூன்றுக்கும் அதிக மடங்கு நிறை கொண்ட இந்த கிரகம் “சுப்பர் ஏர்த்” என வகைப்படுத்தப்படும் இடத்தில் உள்ளது.

பூமியில் இருந்து வெறும் ஆறு ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் பார்னார்ட்ஸ் என்ற நட்சத்திரத்தை இந்த கிரகம் வலம் வருகிறது.

ஏழு கருவிகளிலிருந்து 771 தனிப்பட்ட அளவீடுகள் உட்பட 20 ஆண்டுகளின் தரவுகளை கொண்டே இந்த வேற்று உலகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் தொடர்பான விபரம் நேச்சர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

‘பார்னார்ட்ஸ் நட்சத்திரம் பி’ என அறியப்படும் இந்த கிரகமானது சூரிய குடுப்பத்திற்கு வெளியில் பூமிக்கு மிக நெருக்கமான இரண்டாவது கிரகமாகும். இது தனது சூரியனை 233 நாட்களுக்கு ஒருமுறை சூற்றிவருகிறது.

ஒப்பீட்டளவில் தனது நட்சத்திரத்தை நெருக்கமாக வலவருகின்றபோது எமது சூரியனிடம் இருந்து பூமி பெறுவதை விடவும் இரண்டு வீதத்திற்கு குறைவான சக்தியையே இந்த கிரகம் பெறுகிறது. இந்த கிரகத்தின் வெப்பநிலை மைனஸ் 170 டிகிரி செல்சியஸ் அளவாக இருக்கும் என்று இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்ட ஆய்வுக் குழுவினர் கணித்துள்ளனர். இது உயிர்வாழ்வதற்கு சாத்தியம் இல்லாத அளவு குளிரானதாகும்.

“இது நிச்சமாக உயிர்வாழ சாத்தியமான மண்டலமல்ல, திரவ நீர் இருக்காது. நீர் அல்லது வாயு இருந்தால் அது தின்மமாகவே காணப்படும். இதனாலேயே நாம் இதனை உறைந்த கிரகம் என்று கூறுகிறோம்” என்று கட்டலோனியா விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் ஸ்பெயின் விண்வெளி விஞ்ஞான நிறுவனத்தைச் சேர்ந்த இக்னாசி ரிபாஸ் குறிப்பிட்டுள்ளார்.

சூரியனுடன் ஒப்பிடுகையில் 3 வீதம் மாத்திரமே ஒளிரும் சிவப்பு குள்ள நட்சத்திரமான பார்னார்ட்ஸ் மிகக் குறைவான சூரிய சக்தியையே வெளியிடுகிறது.


Add new comment

Or log in with...