தமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை | தினகரன்

தமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை

தமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை-Gaja Cyclone-North Schools Closed

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை

கஜா புயல் காரணமாக வட மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் இன்றையதினம் (16) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுனர் அலுவலகம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

வட மாகாண பாடசாலைகளில் தற்போது ஆண்டு இறுதி பரீட்சை நடைபெற்று வரும் நிலையில் குறித்த பணிகளை இன்றைய தினம் (16) இடைநிறுத்தியுள்ளதாக, வட மாகாண கல்விக் காரியாலயம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “கஜா” எனப் பெயரிடப்பட்டுள்ள பாரிய சூறாவளி மேற்கு - தென்மேற்கு திசைகளுக்கு இடையில் நகர்ந்து இன்று (16) அதிகாலை 00.30 மணிக்கும் 02.30 மணிக்கும் இடையில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கரையைக் கடந்துள்ளது.

இத் தொகுதி இன்று (16) அதிகாலை 02.30 மணிக்கு இலங்கைக்கு வடக்கு - வடமேற்கு திசைகளுக்கிடையில் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 75 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 10.4N கிழக்கு நெடுங்கோடு 79.7E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளதாக வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது மேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த 6 மணித்தியாலங்களில் படிப்படியாக பலமிழந்து ஒரு சூறாவளிக் காற்றாக மாறும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது .

இத் தொகுதி நவம்பர் இன்று (16) இலங்கையை விட்டு விலகிக் செல்லக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே இலங்கையின் வடக்குப் பகுதியிலும் வட கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை இன்று மாலையிலிருந்து படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்கள் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் இன்று மாலையிலிருந்து காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 110 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் வரை காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

தென் கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

வடக்கிலும், புத்தளத்திலும் மழை
வட மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. யாழ் குடாநாட்டில் 100 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அநுராதபுரம் மாவட்டத்தில் இடைக்கிடை மழை பெய்யும்.

மேல் மாகாண கரையோரப்பகுதிகளிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 - 80 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் காலை வேளையில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.    


Add new comment

Or log in with...