நான்கு பேர்ச் காணிக்கு, காணி உறுதிப்பத்திரம் வழங்க காத்தான்குடி நகர சபையில் தீர்மானம் | தினகரன்

நான்கு பேர்ச் காணிக்கு, காணி உறுதிப்பத்திரம் வழங்க காத்தான்குடி நகர சபையில் தீர்மானம்

காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் 4 பேர்ச் காணிக்கு, காணி உறுதிப்பத்திரங்களை வழங்க காத்தான்குடி நகர சபை அனுமதி வழங்குவதென காத்தான்குடி நகர சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாதாந்த அமர்வின் போதே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதரனினால் காத்தான்குடி நகர சபைக்கு அனுப்பப்பட்ட 4 பேர்ச் காணிக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பிலான கடிதம் இதன் போது கலந்துரையாடலுக்கு எடுக்கப்பட்டு ஆராயப்பட்டது.

இதன் போது காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் 4 பேர்ச் காணிக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்க சிபாரிசு செய்வதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

4 பேர்ச் அல்லது அதற்கு மேலுள்ள காணிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க சிபாரிசு கோரப்பட்டு பிரதேச செயலாளரினால் அனுப்பப்பட்ட கடிதத்தை ஏற்றுக் கொண்டு அதற்கான அனுமதியினை வழங்குவதெனவும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு இக் கூட்டத்தில் அடுத்த 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவும் சபையினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. காத்தான்குடி நகரம் சன அடர்த்தியான ஒரு நகரமாகும். இங்கு காணிப்பிரச்சினை என்பது அதிகமாக உள்ளது.

4 பேர்ச் காணியையும் அதற்கு குறைவான அளவு பேர்ச் காணியையும் வைத்துக் கொண்டு கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி கோருகின்றனர். சன அடர்த்தியாக இந்த நகரத்தில் பல்வேறு நோய்களுக்கு மத்தியில் தொற்றா நோய்களுக்கும் ஆளாக வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

இவைகளை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும் என காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...