புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மஹிந்தவே தொடர்ந்தும் பிரதமர் | தினகரன்

புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மஹிந்தவே தொடர்ந்தும் பிரதமர்

எதிர்கால நடவடிக்ைககள் தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவும், சட்டங்களை மீறாத வகையிலும் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயகத்துக்கு முரணான வகையில் பாராளுமன்றத்தின் செயற்பாடு நேற்று அமைந்திருந்ததாகக் குற்றஞ்சாட்டிய அமைச்சர்கள், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானத்துக்கு அமைய புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படும்வரை தற்பொழுதுள்ள அமைச்சரவை பதவியிலிருக்கும் என்றும் தெரிவித்தனர்.

அமைச்சரவைத் தீர்மானங்கள் குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரே இந்தக் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதுவரை அரசியலமைப்புக்கு அமையவே ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். எனவே சபாநாயகர் அனுப்பியுள்ள அறிக்கை கிடைத்ததும் சட்டத்துக்கு உட்பட்டதாகவும், அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தாது பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராகவே நீதிமன்றம் சென்றனர். உச்சநீதிமன்றம் இன்னமும் இறுதித் தீர்ப்பை அறிவிக்கவில்லை. இடைக்காலத்தடையுத்தரவே பிறப்பித்துள்ளது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி முன்னர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தமைக்கு அமைய சபாநாயகர் சபையைக் கூட்டியிருந்தார். எனினும், நிலையியற் கட்டளைக்கு அமைய செயற்படவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து ஒழுங்குப் புத்தகத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சபாநாயகர் தனக்கு விரும்பியவாறு செயற்பட்டுள்ளார் எனவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

அது மாத்திரமன்றி உரிய முறையில் வாக்கெடுப்புக் கோரப்படவுமில்லை. இலத்திரனியல் வாக்கெடுப்பை நடத்தக்கூடியதாக இருக்கும் நிலையில் குரல்களின் அடிப்படையில் சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், பாராளுமன்றம் கூடிய பின்னர் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அவசர அவசரமாக ஆவணமொன்றை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தார். அதில் என்ன இருந்தது என்று எமக்குக் காண்பிக்கப்படவில்லை என அமைச்சர் தயாசிறி ஜயசசேகர கூறினார்.

ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதாகக் காட்டிக்கொள்ளும் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்து எதுவும் சபைக்கு அறிவிக்காத சபாநாயகர், இரண்டு தரப்பினரினதும் நியாயங்களைக் கேட்காது ஒரு தரப்புக்கு மாத்திரம் ஆதரவாகச் செயற்பட்டுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சுமத்தினார். ஒரு பிழையை மறைப்பதற்கு இன்னொரு பிழையைச் செய்வது சரியாக அமையுமா எனக் கேள்வியெழுப்பிய அவர், புதிய பிரதமர் நியமிக்கப்படும்வரை தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியிலிருக்கும். எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார் எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் சுட்டிக்காட்டினார்.

மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...