தேவைக்கு அதிக உற்பத்தி: எண்ணெய் விலையில் சரிவு | தினகரன்

தேவைக்கு அதிக உற்பத்தி: எண்ணெய் விலையில் சரிவு

எண்ணெய்க்கான தேவை குறையும் என்ற அச்சத்தில் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.

எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு அடுத்தாண்டு சர்வதேச அளவில் ஒரு நாளைக்கான எண்ணெய் தேவையானது 1.29 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் இருக்கும் என்று கணித்ததை தொடர்ந்து விலை குறைந்துள்ளது. இது அவர்கள் முன்னர் கணித்ததைவிட கிட்டத்தட்ட 70,000 பீப்பாய்கள் குறைவாகும். இதன்படி பிரென்ட் மசகு எண்ணெய் கிட்டத்தட்ட 7 வீதம் சரிவு கண்டு பீப்பாய் ஒன்று 65.11 டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த மார்ச் தொடக்கம் மிகக் குறைந்த விலையாகும். வெஸ்ட் டெக்ஸாஸ் இன்டர்மீடியேட் என அறியப்படும் அமெரிக்க எண்ணெய் 7 வீதம் சரிவு கண்டு பீப்பாய் ஒன்று 55.69 டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த நவம்பர் தொடக்கம் சந்தித்த மிகக் குறைந்த விலையாகும்.

தேவைக்கு விஞ்சிய எண்ணெய் ஏற்றுமதியை தவிர்க்க அடுத்த ஆண்டும் எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் உற்பத்தி நாடுகளின் ஒப்பெக் இணங்கியதாக சவூதி எரிசக்தி அமைச்சர் காலித் அல் பாலிஹ் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க எண்ணெய் உற்பத்தியின் ஒபெக் உறுப்பு நாடுகளில் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக சவூதி உள்ளது.


Add new comment

Or log in with...