உக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம் | தினகரன்

உக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்

இஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான மோதலை முடிவுக்குக் கொண்டுவர எகிப்தின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேலுடனான யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு பலஸ்தீன குழுக்கள் இணங்கியுள்ளன.

இந்த யுத்தநிறுத்தத்தை அடுத்து காசாவில் நேற்று அமைதி திரும்பியதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற பரஸ்பரம் தாக்குதல்களால் காசாவில் மற்றுமொரு முழு அளவிலான யுத்தம் ஒன்று ஏற்படும் அச்சுறுத்தல் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் இஸ்ரேல் கடைப்பிடிக்கும் வரை யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாக காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இந்த யுத்த நிறுத்தம் பற்றி இஸ்ரேல் தரப்பில் கருத்து வெளியிடாதபோதும் இஸ்ரேலின் தெற்கு குடியிருப்பு பகுதிகளில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டதோடு, கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள் வெளியேறியதோடு சிறுவர்கள் வழமை போன்று பாடசாலைகளுக்குச் சென்றனர்.

இந்நிலையில் பலஸ்தீன குழுக்கள் வெளியிட்டிருக்கு அறிவிப்பில், “எதிர்ப்புப் போராட்டம் மற்றும் சியோனிஸ எதிரிகளுக்கு இடையில் எகிப்தின் முயற்சியால் யுத்த நிறுத்தம் ஒன்றை எட்ட முடிந்துள்ளது. சியோனிச எதிரிகள் மதிக்கும் வரை நாம் இதனை மதிப்போம் என்று பிரகடனம் செய்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து காசா நகரில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் வீதிகளில் இறங்கி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

காசா மீது கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது ஏழு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது கடந்த 2014 காசா யுத்தத்திற்கு பின்னர் இடம்பெற்ற மோசமான வன்முறையாக இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவுக்குள் இஸ்ரேல் ஊடுருவி நடத்திய தாக்குதலில் ஏழு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு இஸ்ரேல் சிறப்புப் படை வீரர் ஒருவர் பலியான சம்பவத்தை அடுத்தே இந்த மோதல் தீவிரமடைந்தது.

ஹமாஸ் மற்றும் ஏனைய பலஸ்தீன போராட்டக் குழுக்கள் காடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் மீது 400க்கும் அதிகமான ரொக்கெட் குண்டுகளை வீசியதை அடுத்து இஸ்ரேல் காசா மீது வான் தாக்குதல்களை நடத்தியது.

இதன்போது பலஸ்தீன ஷெஹாப் செய்தி நிறுவனம், அல் அக்ஸா தொலைக்காட்சி மற்றும் அல் அமால் மருத்துவமனை ஆகியன இஸ்ரேல் வான் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.


Add new comment

Or log in with...