நிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல | தினகரன்

நிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல

தேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான ஆதரவு

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஏற்றுக்கொள்வதாக குறிப்பிடப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க எம். பி. தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தெளிவு படுத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்காக மக்கள் விடுதலை முன்னணி நேரடியாகப் பங்களிப்புச் செய்தது என்றும் எனினும் அதற்காக எவரது நற்சான்றிதழும் அவசியமில்லை என்று அனுரகுமார திசாநாயக்க எம். பி. மேலும் தெரிவித்தார்.

மேற்படி செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்பதை தெரிவிக்கும் யோசனை பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்படவில்லையென தெரிவித்த அவர்,

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் யோசனை முன்வைத்தால் அதற்கு ஆதரவு வழங்க ஜே.வி.பி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டபூர்வமாகவே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார் .

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது. சபாநாயகர் கரு ஜயசூரிய நேர்மையாக தனது கடமையை செய்தார் என்பதை நாம் கூற வேண்டும். அதேபோல் நீதிமன்றமும் நேற்று நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுத்தது. அதற்கமையவே இன்று (நேற்று) பாராளுமன்றம் கூட்டப்பட்டது.

இதன்போதும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின்படியே பாராளுமன்றம் கூட்டப்பட்டது. பாராளுமன்றம் சட்டவிரோதமல்ல. அதேபோல் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, இன்று (நேற்று) பாராளுமன்றம் கூடியமை, மற்றும் பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, அரசியலமைப்பிற்கும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் முரணானதல்ல.

நாம் சூழ்ச்சி செய்யவில்லை, சூழ்ச்சியை தோற்கடிக்க எமக்குள்ள ஒரே வழிமுறையை நாம் கையாண்டோம். நாம் விவாதம் ஒன்றை நடத்த தயாராக இருந்தோம். ஆனால் அதற்கு இடமளிக்கவில்லை.

இப்போது உள்ள நிலையில் நாடு முன்னோக்கி செல்ல முடியாது.இதற்கு முன்பிருந்த நிலையிலும் முன்னோக்கி செல்ல முடியாது.

நீதிமன்ற தீர்ப்பு மற்றும் பாராளுமன்ற நிலைப்பாடு இரண்டையும் ஜனாதிபதி கருத்தில் கொண்டு சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.

தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரம் பெறவேண்டும். அதற்கு ஆதரிக்க நாம் தயார். நாம் ஐ. தே. கவுக்கு துணைபோக வில்லை. கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளை நாம் கண்டித்தோம்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலர் பின்வாங்கிய போதும் நாம் வாக்களித்தோம் என்றும் கூறினார். இன்று (நேற்று) நாட்டில் பிரதமரோ அமைச்சர்களோ கிடையாது. உரியவர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...