நிலையியற் கட்டளையை மீறி நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் குழப்பம் | தினகரன்

நிலையியற் கட்டளையை மீறி நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் குழப்பம்

சம்பிரதாயத்திற்கு முரணாக  குரல் மூலம் வாக்ெகடுப்பு

பாராளுமன்ற சம்பிரதாயம், நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு முரணாக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது சட்டவிரோதமாக வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என ஆளும் தரப்பின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததால் பாராளுமன்றத்தில் நேற்று குழப்பநிலை ஏற்பட்டது.

செங்கோல் உரிய இடத்தில் வைக்கப்படாத நிலையிலும் தனக்கு வாக்கெடுப்பு நடத்த தனக்கு அதிகாரம் இருப்பதாக அறிவித்த சபாநாயகர் நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தினார்.இதன்போது சட்ட விரோதமாக வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக ஆளும் தரப்பினர் சபை நடுவில் திரண்டு கோஷம் எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனால் சபையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாந்து செங்கோலை தூக்கிக் கொண்டு சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகில் சென்று நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் நேற்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியது. இதன் போது பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஆளும் தரப்பினருக்கு ஆளும் தரப்பில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஐ.தே.க எம்.பிகள் எதிரணியில் அமர்ந்திருந்தார்கள். கருப்புப் பட்டி அணிந்த நிலையிலே அவர்கள் சபைக்கு வருகை தந்திருந்தனர். சபாநாயகரின் அறிவிப்பின் போது ஆளும் தரப்பில் இருந்த ராஜாங்க அமைச்சர் பியசேன கமகே, மனுஷ நாணயக்கார எம்.பி. ஆகியோர் எதிரணிக்கு சென்றதோடு ஐ.தே.க எம்.பிகள் கரகோசம் எழுப்பி அவர்களை வரவேற்றனர். இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும் முன்னதாக எதிரணியில் அமர்ந்திருந்தார்.

இந்த நிலையில் முதல் அம்சமாக பாராளுமன்றம் பின்போடப்பட்டது தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பை செயலாளர் நாயகம் வாசித்தார்.

அதனை தொடர்ந்து எழுந்து நின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி எம்.ஏ.சுமந்திரன், நிலையியற் கட்டளைகளை ஒதுக்கி இன்றைய சபை நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்.

இதனையடுத்தே சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது. நிலையியற் கட்டளையின் பிரகாரம் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபாநாயகரை கோரியதோடு பாராளுமன்றத்தை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறும் கோரினார்.

நிலையியற் கட்டளைகளை ஒத்திவைக்கும் சுமந்திரன் எம்.பியின் யோசனையை ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வழிமொழிந்தார்.

இதனையடுத்து எழுந்து நின்ற சபை முதல்வர் தினேஷ் குணவர்தன.பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்படுவது தான் பாராளுமன்ற சம்பிரதாயமாகும்.இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் ஜனாதிபதியின் அறிவிப்பையடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட வேண்டும். அரசியலமைப்பை யாருக்கும் மீற முடியாது என்றார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் யோசனை ஒன்றை செயலாளர் நாயகத்திடம் கையளித்தார்.

இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த சபை முதல்வர், யோசனை தற்பொழுது தான் கையளிக்கப்பட்டது. இதனை ஒழுங்குப் புத்தகத்தில் உட்படுத்திய பின்னரே விவாதத்திற்கு எடுக்கவோ வாக்கெடுப்பிற்கு விடவோ முடியும் என்றார்.

அநுர குமார திசானாயக்க எம்.பி;

சுமந்திரன் எம்.பி நிலையியற் கட்டளைகளை இரத்துச் செய்யும் யோசனையை முன்வைத்தார். நம்பிக்கையில்லா பிரேரணை யோசனையை தான் விஜித ஹேரத் கையளித்தார். இந்த அரசாங்கம் மீதும் பிரதமர் மீதும் பாராளுமன்றத்திற்கு நம்பிக்கையில்லை என்ற யோசனையை முன்வைக்கிறேன்.

சபாநாயகர்;

இந்த யோசனையை சபை ஏற்கிறதா? ஜனநாயகத்திற்கு அமைய பெரும்பான்மை கருத்தை ஏற்று செயற்படுகிறேன்.

அமைச்சர் விமல் வீரவங்ச;

நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்க கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறின்றி வாக்கெடுப்பு நடத்தும் சம்பிரதாயம் கிடையாது. இது நிலையியற் கட்டளைகளை மீறும் செயலாகும் என்றார்.

லக்‌ஷ்மன் கிரியெல்ல;

வாக்கெடுப்பை நடத்துங்கள்.

சபாநாயகர்;

பெரும்பான்மையினர் ஆதரவு என்பதால் வாக்கெடுப்பு நடத்துகிறேன்.

இதற்கு எதிராக ஆளும் தரப்பினர் சபையின் நடுவில் திரண்டு கோசம் எழுப்பினர். அவர்களை ஆசனங்களுக்கு செல்லுமாறு அவர் கோரினாலும் எம்.பிகள் அங்கிருந்து நகரவில்லை.

சபாநாயகர்;

143 இன் கீழ் வாக்கெடுப்பு நடத்த எனக்கு அதிகாரம் உள்ளது. மணியை அடியுங்கள்

ஆனால் மணி அடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சபாநாயகரின் அருகில் சென்ற விஜித ஹேரத் எம்.பி பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்துமாறு கோரினார்.

சபாநாயகர்;

ஆசனத்தில் சென்று அமருங்கள். இன்றேல் குரல் மற்றும் முகத்தை பார்த்து வாக்கெடுப்பு நடத்த நேரிடும். இதன் போது எதிரணி எம்.பிகள் கையை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதமருக்கு பெரும்பான்மை இல்லை என அறிவிப்பதாக குறிப்பிட்ட சபாநாயகர், பாராளுமன்றத்தை 26 ஆம் திகதி கூட்டுவதாக அல்லது நாளை (இன்று) 15 ஆம் திகதி கூட்டுவதா? சபை தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பாராளுமன்றத்தை நாளை (இன்று) கூட்டுமாறு லக்ஷ்மன் கிரியெல்ல கோரினார். இதனையடுத்து பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக பாராளுமன்ற அமர்வுகளை பார்வையிட சில வெளிநாட்டு தூதுவர்களும் வருகை தந்திருந்ததோடு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலையை அவர்கள் கைபேசிகளில் படம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் எதிரணி எம்.பிகள் சபை நடுவில் திரண்டு கோசம் எழுப்பி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். (பா)

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...