எம்.பிக்கள் சொல்வதை சபாநாயகர் செவிமடுக்க வேண்டும் | தினகரன்

எம்.பிக்கள் சொல்வதை சபாநாயகர் செவிமடுக்க வேண்டும்

நடுநிலையாகவும் சுயாதீனமாகவும் சபாநாயகர் செயற்படவேண்டும். தான் எத்தகைய நிலைப்பாட்டுடன் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தாலும் எம்.பிக்கள் சொல்வதை செவிமடுத்து முடிவுகள் எடுப்பதே சபாநாயகரின் பொறுப்பாகும். ஆனால், சபாநாயகர் கரு ஜயசூரிய பக்கச்சார்பாக செயற்பட்டதாக முன்னாள் சபாநாயகர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சபாநாயகரினால் பிரதமர் ஒருவரை நியமிக்க முடியும் என்றால் எனக்கும் அன்று தேவையான ஒருவரை பிரதமராக நியமித்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சபாநாயகர் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது. நிலையியற் கட்டளை, முன்னாள் சபாநாயகர்களின் முன்மாதிரிகள், பிரித்தானியா, இந்தியா போன்ற பாராளுமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் என்பவற்றின் பிரகாரம் சபாநாயகர் நடுநிலையாகவும் சுயாதீனமாகவும் தீர்ப்பு வழங்க வேண்டும்.

தான் கொண்டிருந்த நிலைப்பாட்டுடனேயே அவர் இன்று சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தார். தனது மனதில் என்ன இருந்தாலும் எம்.பிக்கள் சொல்வதை அவர் செவிமடுக்க ​வேண்டும். ஏதும் யோசனை முன்வைக்கப்பட்டால் அதனை வாசித்து தேவையெனின் மாற்றங்கள் செய்து ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்க வேண்டும். 5 நாட்களின் பின்னரே அது தொடர்பில் செயற்பட முடியும். ஆனால் தனக்கு வழங்கிய யோசனையில் என்ன இருக்கிறது? என்று கூட தெரியாமல் எம்.பிக்களின் பேச்சுக்கு செவிமடுக்காமல் வாக்கெடுப்பு நடத்தினார். வாக்கெடுப்பின் போது சபையை அமைதிப்படுத்த வேண்டும்.

முடியாவிட்டால் பாராளுமன்றத்தை 5 நிமிடம் ஒத்திவைத்து தேவையான முடிவெடுக்க வேண்டும். சபாநாயகரின் தீர்ப்பையும் அவரின் கருத்துக்களையும் ஏற்க முடியாது. இன்று (நேற்று) நடந்தவை யாவும் சட்டவிரோமானவை. டிசம்பர் 7 ஆம் திகதி வழங்கப்படவிருக்கும் தீர்ப்பு வரை ஏன் காத்திருக்க முடியாது?. இன்று (நேற்று) நடந்ததை கண்டிக்கிறோம். சபாநாயகரினால் பிரதமர் ஒருவரை நியமிக்க முடியுமெனின் நான் சபாநாயகராக இருந்தபோது கூட எனக்குத் தேவையான ஒருவரை நியமித்திருக்கலாம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

 


Add new comment

Or log in with...