கசோக்கி கொலையாளியின் தொலைபேசி உரை அம்பலம் | தினகரன்

கசோக்கி கொலையாளியின் தொலைபேசி உரை அம்பலம்

செய்தியாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சற்று நேரத்தில் இந்த கொலையில் ஈடுபட்ட சவூதி குழுவைச் சேர்ந்த ஒருவர் சவூதியின் உயர்பட்டத்தைச் சேர்ந்த ஒருவரை தொலைபசியில் அழைத்து, “எமது பணி நிறைவேற்றப்பட்டதாக உங்களின் முதலாளியிடம் கூறுங்கள்” என்று குறிப்பிட்டிருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.

கசோக்கி கொலை தொடர்பில் துருக்கி உளவு அமைப்பால் பெறப்பட்ட ஓடியோ ஒன்று தொடர்பில் பரீட்சயமான மூவரை மேற்கோள் காட்டி அந்த பத்திரிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டிருக்கும் “உங்களின் முதலாளி” சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானை குறிப்பதாக இருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்த கொலையுடன் பின் சல்மான் தொடர்புபட்டிருப்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த ஓடியோ இருப்பதாக அமெரிக்க உளவுப்பிரிவு அதிகாரிகள் நம்புகின்றனர்.

கசோக்கியை இலக்கு வைத்து இஸ்தான்பூலுக்கு அனுப்பப்பட்ட 15 சவூதியர்களில் ஒருவரான மஹெர் அப்துல் அஸிஸ் முத்ரப் என்பவர் தொலைபேசி அழைப்பு ஒன்றை ஏற்படுத்தி அரபு மொழியில் உரையாற்றியுள்ளார். முடிக்குரிய இளவரசருடன் பாதுகாப்பு அதிகாரியாக முத்ரப் அடிக்கடி பயணிப்பவராக இருந்துள்ளார்.

இவர் பின் சல்மானுக்கு மிக நெருக்கமான ஒருவருக்கே தொலைபேசியில் அழைப்பு விடுத்திருப்பதாக துருக்கி உளவு அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளனர்.

“வேலை முடிந்தது” என்று முத்ரப் அந்த உதவியாளருக்கு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கசோக்கியின் கொலை தொடர்பில் பின் சல்மான் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று சவூதி அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.

சவூதி அரச குடும்பத்தை கடுமையாக விமர்சித்து வந்த கசோக்கி கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி இஸ்தான்பூலில் இருக்கும் சவூதி துணைத் தூதரகத்திற்குள் கொல்லப்பட்டார். அவரது உடல் எங்கே என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.


Add new comment

Or log in with...