சபாநாயகரினால் ஜனாதிபதிக்கு ஆவணங்க்ள அனுப்பிவைப்பு | தினகரன்

சபாநாயகரினால் ஜனாதிபதிக்கு ஆவணங்க்ள அனுப்பிவைப்பு

சபாநாயகரினால் ஜனாதிபதிக்கு ஆவணங்க்ள அனுப்பிவைப்பு-Karu Jayasuriya Send Documents to President Regarding No Confidence Motion-Speakers Media Release-14-11-2018

பாராளுமன்றத்தில் இன்றைய நாளில் கையளிக்கப்பட்ட, நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சபநாயகரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு குறித்த ஆவணங்களை அனுப்பி வைக்க, சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி, அது தொடர்பிலான சபையின் முடிவு மற்றும் ஜனாதிபதியினால் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன அரசியலமைப்புக்கு விரோதமானது என தெரிவிக்கும் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதத்தின் பிரதி ஆகியனவே இவ்வாறு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2095/50  எனும் இலக்கத்தைக் கொண்ட  2018 நவம்பர் 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இன்றைய தினம் (2018.11.14) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.

கௌரவ சபாநாயகரால் அன்றைய நாளுக்கான வழமையான நடவடிக்கைகளுக்கு அமைய அறிவித்தலை முன் வைத்ததன் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள், நிலையில் கட்டளைகளை இடைநிறுத்தி ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யோசனையொன்றை முன்வைத்தார்.

அது தொடர்பில் சபையின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வாக்கெடுப்புக்கான யோசனை முன்வைக்கப்பட்டதோடு, அதில் பெரும்பான்மையினர் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தனர்.

அதன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்று சபையில் முன்வைக்கப்பட்டது. இன்றைய தினமே அது தொடர்பில் சபையின் நிலைப்பாட்டை அறிய வேண்டுமெனவும் அவர்கள் யோசனையை முன்வைத்தனர்.

இவ்வேளையில் எதிர்க் கட்சி சார்பில் பிரிப்பு மேற்கொள்ளுமாறு கூறப்பட்டதோடு, பிரிப்புக்கான மணி அடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சபாநாயகரால் வாக்கெடுப்புக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

இதன்போது, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பான்மையினரால் வாக்களிக்ப்பட்டது. அதற்கமைய குறித்த நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட்டதாக கௌரவ சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்லவினால், நாளை முற்பகல் 10.00 மணி வரை அவையை ஒத்தி வைக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டதோடு, அதற்கு சபையின் அனுமதி கிடைத்தது.

இன்றைய நாளில் கையளிக்கப்பட்ட,
நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி மற்றும் அது தொடர்பிலான சபையின் முடிவு
கௌரவ ஜனாதிபதி அவர்களினால் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன அரசியலமைப்புக்கு விரோதமானது என தெரிவிக்கும், 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதத்தின் பிரதி ஆகியவற்றை,

அரசியலமைப்புக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைக்க, கௌரவ சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சபாநாயகரின் ஊடகப் பிரிவு
 

சபாநாயகரினால் ஜனாதிபதிக்கு ஆவணங்க்ள அனுப்பிவைப்பு-Karu Jayasuriya Send Documents to President Regarding No Confidence Motion-Speakers Media Release-14-11-2018


Add new comment

Or log in with...