அரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது | தினகரன்

அரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது

அரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது-FR Petition Against Parliament Dissolve-AG Explanation

- சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றில் விளக்கமளிப்பு
- எனவே அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கு அமையவே, ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

நேற்றைய தினம் (12)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணை இன்று (13) உச்சநீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் நலின் பெரேரா, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்ட மா அதிபர் இவ்வாறு விளக்கமளித்தார்.

இன்று (13)  காலை 10.00 மணியளவில் குறித்த மனு மீதான விசாரணை, ஆரம்பமானது.

அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் 2 ஆவது பிரிவிற்கு அமைய, பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு சரியானது என சட்ட மா அதிபர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் குறித்த அதிகாரத்தை, அரசியலமைப்பின் வேறு எந்தவொரு பிரிவும் கட்டுப்படுத்தவில்லை என்பதால், ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர் பாராளுமன்றத்தை கலைத்துள்ளார் என, சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தை கலைத்தைமைக்கு எதிராக இடைக்கால தடை பிறப்பிக்கப்படுமாயின் அது, அரசியலமைப்பு மாத்திரமன்றி மக்களது சுயாதிபத்தியத்தையும் மீறுவதாக அமையும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

விளக்கமளிப்பதற்காக ஜனாதிபதியிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது,  எந்த வகையிலும் நெறிமுறையை மீறாது என அவர் தனது விளக்கத்தில் தெரிவித்திருந்தார்.

எனவே அது அரசியலமைப்புக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இம்மனு மீதான விசாரணை நேற்று (12) இடம்பெற்றபோது,  தனக்கு கால அவகாசம் வழங்குமாறு சட்ட மா அதிபர் கோரியிருந்த நிலையில் இன்று (13) சுமார் ஒன்றரை மணிநேரம் தனது விளக்கத்தை வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில் தற்போது அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துள்ள நிலையில், தீர்ப்பு வழங்குவதற்காக வழக்கு 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...