2,559 பகுதிகளை 'கஜா' புயல் தாக்கக்கூடிய அபாயம் | தினகரன்

2,559 பகுதிகளை 'கஜா' புயல் தாக்கக்கூடிய அபாயம்

நாளை பிற்பகலில் தமிழக கரையை கடக்கும் என தகவல்
முன்னெச்சரிக்கையாக 410 அதிகாரிகள் குழு களத்தில்

கஜா புயல் நவம்பர் 15ம் திகதி முற்பகலில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை இந்திய வானிலை ஆய்வு மையம் மாற்றியுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்தியில் வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயலானது வேகம் குறைந்து மிகக் குறைந்த வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

வங்கக் கடலில் சென்னையில் இருந்து 740 கி.மீ. தூரத்திலும் நாகப்பட்டினத்தில் இருந்து 830 கி.மீ. தூரத்திலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுவடைந்தாலும் தமிழகத்தை நெருங்கும் முன்பு வலு குறைந்த நிலையில் புயலாக மட்டுமே கரையை கடக்கும்.

கஜா புயல் மணிக்கு 7 கி.மீ., 6 கி.மீ., 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அதன் நகர்வு வேகம் 4 கி.மீ. ஆகக் குறைந்து உள்ளது. வேகம் குறைந்ததால் முன்கணிக்கப்பட்டதை விட தாமதமாக கஜா புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது 15ம் திகதி முற்பகலுக்கு பதிலாக பிற்பகலில்தான் கஜா புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக 410 அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். கஜா புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலின் திசை அடிக்கடி மாறி வருகிறது என கூறியுள்ளார். இதுவரை கஜா புயல் 3 முறை தனது பாதையை மாற்றிக் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

கஜா புயல் நகர்வைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கஜா புயலை எதிர்கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் கடந்துசெல்லும் பாதையிலுள்ள மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக 2,559 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே தயார் நிலையில் இருக்குமாறு கடலோர மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக 410 அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர், நாகை, சென்னை உள்ளிட்ட இடங்களில் 8 தேசிய பேரிடர் மீட்புக்குழு முகாமிட்டுள்ளது. புயல் காலங்களில் பழைய கட்டடங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். புயலின்போது வானங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். பாடசாலைகளுக்கு விடுமுறை விடுவது பற்றி மாவட்ட நிர்வாகங்களே முடிவெடுத்துக்கொள்ளலாம்.

ஜெனரேட்டர்களை உயரமான பகுதியில் வைக்குமாறும், போதிய அளவு ஒட்சிசன் சிலிண்டர்களை வைத்திருக்கவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலால் சேதமடையும் மரங்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...