மேற்கிந்திய தீவூக்கு எதிரான 20க்கு 20 தொடர் இந்திய அணி அள்ளிச் சுருட்டியது | தினகரன்

மேற்கிந்திய தீவூக்கு எதிரான 20க்கு 20 தொடர் இந்திய அணி அள்ளிச் சுருட்டியது

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ரி 20 தொடரின் இறுதிப் போட்டி (11) சென்னையில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்த இந்திய அணி இப்போட்டியிலும் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 3-–0 என தொடரை கைப்பற்றியது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடியது. அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் சிம்ரோன் ஹிட்மயர் ஜோடி அணிக்கு நல்லதொரு ஆரம்பத்தை வழங்கியிருந்தனர். இருவரும் இணைந்து 51 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஷாய் ஹோப் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததை தொடர்ந்து சிம்ரோன் ஹிட்மயர் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார். பின்னர் தினேஷ் ராம்டின் 15 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்கும் போது மேற்கிந்திய தீவுகள் அணி 12.5 ஓவர்களில் 94 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நான்காவது விக்கெட்டுக்காக இணைந்த டர்ரன் பிராவோ மற்றும் நிக்கோலஸ் புரான் ஆகியோர் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 87 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக அதிக பட்சமாக நிக்கோலஸ் புரான் 25 பந்துகளில் 53 ஓட்டங்களையும் பிராவோ டர்ரன் 43 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் யுஸ்வேந்திரா ஷஹால் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

182 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர்.

ரோஹித் ஷர்மா 4 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததுடன் தொடர்ந்து களமிறங்கிய லோகேஷ் ராகுல் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார். பின்னர் தவான் மற்றும் ரிஷாஃப் பான்ட் ஜோடி அதிரடியாக 130 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ரிஷாஃப் பான்ட் 58 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 92 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ரி 20 தொடர் வெற்றியுடன் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி 20 என அனைத்து தொடரையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...