மிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு! | தினகரன்


மிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு!

விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான 'சர்கார் ' திரைப்படம் தேர்தல் மற்றும் வாக்கு அரசியலைப் பேசும் படமாக அமைந்திருந்தது. இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும் ஆளும் கட்சியின் கடும் எதிர்ப்புக்குள்ளானது.

படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்ற பெயரை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்தது ஆளும் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இலவசங்கள் குறித்தும் காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்கக் கோரியும் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

பெனர்கள் கிழிப்பு, காட்சிகள் ரத்து என அ.தி.மு.கவினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``சர்கார் திரைப்படம் தொடர்பான பெனர்களை அ.தி.முகவினர் கிழித்தார்கள் என்பது தவறான தகவல். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களோடு சேர்ந்து அ.தி.மு.கவினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்கள்கூட விலையில்லா பொருட்களை வாங்கியிருக்கின்றனர்.

அந்தப் பட்டியலை நாங்கள் வைத்திருக்கிறோம். விலையில்லா திட்டங்களால்தான் உயர்கல்வியில் தமிழகம் 46.8 சதவிகிதமாக சிறந்து விளங்குகிறது. படத்தில் கோடிகோடியாக சம்பாதிக்கும் திரையுலகினர் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றனர்? அந்தப்படத்தில் குறிப்பிட்ட காட்சியை நீக்கியிருக்கிறார்கள். சர்கார் பிரச்சினை சுமுகமாக முடிந்துவிட்டது. ஊடகங்கள் இனி இதை பெரிதுப்படுத்த வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் `சர்கார்' படக்குழுவினர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி ஒன்றாக சந்தித்துள்ளனர். இந்தப் புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு கேக்கின் மேலிருக்கும் மெழுகுவர்த்தியை ஒளியேற்றுவதுபோல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதே நேரத்தில் அந்த கேக்கில் சிறு சிறு மிக்ஸி, கிரைண்டர்களால் அலங்காரப்படுத்தப்பட்டிருந்ததை மீம்ஸுகளாக போட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

இலவச பொருட்களை விஜய் ரசிகர்கள் ஒருபுறம் போட்டு உடைப்பதே பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில் சர்கார் படக்குழுவின் இந்த கேக் புகைப்படம் என்ன விளைவுகளைத் தரும் என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.


Add new comment

Or log in with...