கோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல; அவரே என்னிடம் சொன்னார் | தினகரன்


கோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல; அவரே என்னிடம் சொன்னார்

டிடிவி தினகரன்

கோமளவல்லி என்கிற பெயர் ஜெயலலிதாவின் பெயரே அல்ல. இதுகுறித்து ஜெயலலிதாவே என்னிடம் கூறியுள்ளார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

'சர்கார்' படத்தில் ஜெயலலிதாவின் பெயரை இழிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து கூறியதாவது:

''நான் அந்தப்படத்தைப் பார்க்கவே இல்லை. கோமளவல்லி என்கிற பெயர் ஜெயலலிதாவின் பெயரே அல்ல. 2002-, 2003-ல் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஒருவர் பேசியது. அந்த நேரத்தில் ஜெயலலிதாவே என்னிடம் கேட்டார். என்ன அது கோமளவல்லி, யார் பெயர் அது, நான் அப்படி ஒரு கெரக்டரில்கூட நடிக்கவில்லை. இப்போது ஏதாவது நெகடிவ் கேரக்டருக்கு அப்படி ஏதும் பெயர் இருக்கா? என்று கேட்டார்.

ஆகவே கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் பெயர் கிடையாது. இன்னொன்று அந்தப் படத்தை வியாபார நோக்கத்துடன் எடுத்துள்ளார்கள். எதையாவது செய்து ஓட வைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கும். அதன் தயாரிப்பாளர் யார் என்று உங்களுக்கே தெரியும், நடிகர் யார் என்று தெரியும். இதில் ஒரே ஒரு இடம் எனக்கு சொல்லப்பட்டது இலவச மிக்சி, கிரைண்டர் எரிக்கப்பட்டதுபோல் அதில் ஜெயலலிதாவின் படம் உள்ளதுபோல் காண்பித்துள்ளார்கள்.

அது 2011-ல் ஜெயலலிதா அறிவித்து மக்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள். அத்துடன் சேர்த்து அந்த இலவச தொலைக்காட்சி கொடுத்தார்களே அதைக் காண்பித்து அதில் ஒட்டியிருந்த படத்தையும் காண்பித்து எரித்ததுபோல் காட்டியிருந்தால் இவர்கள் நடுநிலையாக இலவசங்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று நம்பலாம்.

இவர்கள் செய்வது வியாபார நோக்கத்துடன் எடுக்கப்படும் படம். மக்களுக்கு நல்லது சொல்லும் விவரண படம் கிடையாது. எல்லோரும் சம்பளம் வாங்கித்தான் நடித்திருக்கிறார்கள். அந்தப் படத்தை ஜெயலலிதா இருந்தபோது தயாரித்து, டைரக்ட் செய்து நடித்திருந்தால் அவர்களை பெரிய வீரர்களாக ஏற்றுக்கொள்ளலாம்.

அந்தப் படம் சாதாரணமாகத்தான் ஓடியிருக்கும். ஆனால் இதுபோன்று உள்ளவர்கள் செய்வதை எல்லாம் பெரிதாக எடுத்து பார்க்காதவர்களை பார்க்க வைத்து பிரபல்யத்தை நீங்களே ஏற்படுத்தி கொடுக்கிறீர்களோ என்கிற எண்ணம்தான் தோன்றுகிறது.

மறைந்த தலைவர்களைப் பற்றி அவர்கள் இல்லாதபோது இப்படி எல்லாம் படம் எடுக்கின்றனர். அவர்கள் எந்த அளவுக்கு நாகரிகமானவர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை''.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...