என் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் | தினகரன்

என் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்

காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார் இசையமைப்பாளர் இளையராஜா.

இந்தப் புகாரின் மீது காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது ஒரு சிவில் பிரச்சினை. எங்கள் மீது குற்றவியல் புகார் அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை.

அதை ரத்து செய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது ஒரு சிவில் பிரச்சினை. இதன் அடிப்படையில் குற்றவியல் புகார் அளிக்கமுடியாது என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக இளையராஜா ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நான் 2014-ம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களைப் பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும். அந்தத் தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

நான் 2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளித்தேன். சட்டத்துக்குப் புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை சிடிக்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தது.

அந்தக் குற்றவியல் வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று முன்தினம் வெளிவந்தது. அதில் நீதியரசர் எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். அதில் எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும் எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான்கு ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...