MeToo புதிது புதிதாக புகார்கள் கட்டுக் கதையா, நிஜமா? | தினகரன்

MeToo புதிது புதிதாக புகார்கள் கட்டுக் கதையா, நிஜமா?

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படுவது #MeToo தான். அனைத்துப் பெண்களுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய ஆயுதம்தான் #MeToo.

பல்வேறு ஆண்டுகளாகவே பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி வெளியில் சொல்லத் தயங்கினர். அவர்கள் தயக்கமின்றி தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் தெரிவிக்க இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் 2006-ம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்ட போது மக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படவில்லை. சென்ற 2017-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் #MeToo ஹேஷ்டாக், அது பரவலான ஒன்பது நாள்களில் மட்டும் 17 இலட்சம் ட்வீட்களில் பயன்படுத்தப்பட்டது. 80-இற்கும் மேற்பட்ட உலகநாடுகளிலிருந்து இந்த ட்வீட்கள் வெளிவந்தன.

இந்தியாவைப் பொறுத்தவரை, சென்ற வருடம் ஒக்டோபர் மாதம் #MeToo ஹேஷ்டாக்கை அமெரிக்காவில் சட்டம் பயிலும் தலித் மாணவி ரயா சர்கார் அறிமுகப்படுத்தினார். தற்போது இந்தியாவிலும், இந்த ஹேஸ்டாக் மூலம் பலரும் தைரியமாகத் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி வெளியில் கூறிவருகின்றனர். அதிலும் குறிப்பாக, கடந்த சில மாதங்களாக இந்த #MeToo ஹேஸ்டாக் இந்திய சினிமாவில் ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

பல்வேறு நடிகைகள் தங்களுடைய சிறுவயதிலும், சினிமா வாழ்விலும் ஏற்பட்ட வன்கொடுமைகளைத் தயக்கமின்றி சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதில் பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள், கவிஞர்கள், அரசியல் தரப்பினர்கள் என்று பலருக்குத் தொடர்பு இருப்பதாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்பெண்கள் கூறுகின்ற புகார்களெல்லாம் உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது தெரியவில்லை. இக்குற்றச்சாட்டுகளை பலர் புனைகதை என்கின்றனர். சிலர் நம்புகின்றனர்.

வைரமுத்து வறுத்தெடுக்கப்பட்ட போது வீண் குற்றச்சாட்டு என கண்டித்தவர்கள் ஏராளம்.அதேசமயம் வைரமுத்துவைக் கண்டித்த ஒரு தரப்பினரும் உள்ளனர்.

இதுஒருபுறமிருக்க நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 'நிபுணன்' படத்தில் நடித்த போது அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அர்ஜுன் மறுத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதி பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"ஒத்திகைக்கு வர மாட்டேன், நேராக டேக்கிற்கு தான் வருவேன் என்று இயக்குனரிடம் அப்பொழுதே தெரிவித்தேன். அப்போது எனக்கு தைரியம் இல்லை. தற்போது 'மீ டூ' இயக்கத்தால் தைரியம் வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் பற்றி பலரும் தற்போதுதான் வெளியே சொல்கிறார்கள்.எனக்கு ஒரு ஆண்டு ஆனது.சம்பவம் நடந்த போது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. என்னை இரவு உணவுக்கு அழைத்ததுடன் நான் மறுத்தும் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தார். எனக்கு பயமாகி விட்டது. நான் தர்ஷன், சுதீப் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளேன். அவர்கள் அர்ஜுன் போன்று இல்லாமல் மரியாதையுடன் நடந்து கொண்டனர்.

நான் மட்டும் அல்ல மேலும் நான்கு பெண்களும் அர்ஜுன் மீது புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களின் பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை. தற்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதும் அதை ஊடகங்களிடம் காண்பிக்கிறேன். என்னிடம் ஆதாரம் உள்ளது. அதை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.

சம்பவம் குறித்து பேசக் கூடாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அந்தச் சம்பவம் நடந்த பிறகு நான் அர்ஜுனுக்கு எந்த செய்தியும் அனுப்பவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். தங்களை சூப்பர் ஸ்டார்கள் என்று அழைப்பவர்கள் பாவப்பட்டவர்களிடம் தவறாக நடக்கிறார்கள் என்கிறார்" ஸ்ருதி.

அதேசமயம் நடிகர் அர்ஜூன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ள ஸ்ருதி ஹரிஹரனுக்கு பிரபல நடிகை நீது ஷெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் "நான் ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இத்தகைய பாலியல் தொல்லைகளை யாரும் வெறும் விளம்பரத்துக்காக சொல்ல மாட்டார்கள்.ஸ்ருதிக்கு ஏற்பட்ட மனவலியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

"நான் சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு இத்தகைய மோசமான அனுபவங்கள் நடந்தது இல்லை. ஆனால் ஒரு சில இடங்களில் கசப்பான அனுபவம் எனக்கு நடந்துள்ளது. ஆனால் அதற்கு ஆதாரத்தை என்னால் கொடுக்க முடியாது" என்றார் நீது ஷெட்டி.

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு நடுவேயும், நடிகர் அர்ஜுனுக்கு அவரது குடும்பம் மற்றும் கன்னட திரையுலக வட்டாரத்தில் ஆதரவு அதிகரித்துள்ளது. ஒன்றரை வருடங்கள் முன்பாக ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த போது, எனது முதுகை அர்ஜுன் தடவினார் என்றும், இறுக்கிப் பிடித்தார் என்றும் நடிகை ஸ்ருதி குற்றம்சாட்டியிருப்பது கட்டுக்கதை என்கின்றனர் அவர்கள்.

கன்னட திரை உலகின் முன்னணி தயாரிப்பாளரான முனிரத்னா அம்மாநில செய்தி அலைவரிசை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், குற்றச்சாட்டில் கொஞ்சமும் உண்மையில்லை என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

சினிமா உலகத்திற்கு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 40 வருடங்களுக்கு மேலாக அவர் சினிமாத் துறையில் இருக்கிறார். இதுவரை அவர் மீது ஒரு சிறு கரும்புள்ளி விழுந்தது கிடையாது. சுருதியை பொறுத்தளவில் சினிமாத் துறைக்கு புதியவர். எனவே அவர் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதை சரி செய்வதற்காக தொட்டு இருப்பாரே தவிர தவறான எண்ணத்துடன் அர்ஜுன் தொட்டு இருக்க மாட்டார். ஸ்ருதிதான் தவறாக நினைத்துக் கொண்டு உள்ளார்.

ஸ்ருதி ஹரிஹரன் முதலில் நடிப்பை கற்றுக் கொள்ளட்டும். நீண்டகாலம் இந்த துறையில் வளர்ந்த பிறகுதான், மனிதர்களை புரிந்து கொள்ள முடியும். இது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான பக்குவம் வர அவருக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. தென்னிந்தியாவின் மிகப் பெரிய நடிகர், நடிகைகளுடன் அர்ஜுன் நடித்துள்ளார். ஆனால் இப்படியாக அவர் யாரிடமும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு வந்ததே கிடையாது. சுருதியின் குற்றச்சாட்டில் அர்த்தமே கிடையாது. விஷ்மயா திரைப்படத்தின் நிகழ்ச்சியின் போது இதே அர்ஜுனை வாயாரப் புகழ்ந்து சுருதி பேசியிருந்தார்.

இவ்வாறு தயாரிப்பாளர் முனிரத்னா தெரிவித்தார்.

அர்ஜூனின் மாமனாரும் பிரபல நடிகருமான ராஜேஷ் இதுபற்றி கூறுகையில், "அர்ஜுன் ஒரு நிஜமான ஜென்டில்மேன். அவரது நடத்தையின் காரணமாகதான் நல்ல பெயரை ஈட்டியுள்ளார். அழகான மனைவியும், குழந்தைகளும் அவருக்கு உள்ளனர். ஆனால் சுருதியின் புகார் என்பது அர்ஜூனின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலானது.

ஒருவேளை அர்ஜுன் இளமைக் காலத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தால் கூட நம்பியிருக்காலம். ஆனால் இப்போது அர்ஜுன் வயது 56. ஸ்ருதி வயதில் அர்ஜுனுக்கு குழந்தைகள் உள்ள நிலையில், இவரிடம் அவர் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை நம்ப முடியாது" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தனக்கும் தனது தோழிகளுக்கும் நடிகர் அர்ஜூன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக துணை நடிகை ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் கன்னட தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

"கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 'அர்ஜூனடு' என்ற படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. அந்த படப்பிடிப்பில் 3 நாட்கள் கலந்து கொண்டேன். என்னுடன் 20 கல்லூரி மாணவிகள் பகுதி நேர அடிப்படையில் நடித்து கொடுத்தனர்.

அப்போது அர்ஜூன் என்னிடம் வந்து அந்த பெண்களின் தொலைபேசி எண்களைக் கேட்டார். மேலும் ஒரு ஹோட்டல் அறையின் எண்ணை கொடுத்து அங்கு வருமாறு என்னிடமும் என் தோழிகளிடமும் கூறினார். எனது தோழிகள் பட வாய்ப்புக்காக அர்ஜூனின் அறைக்கு சென்றனர். அங்கு தோழிகளிடம் அர்ஜூன் தவறாக நடந்து கொண்டார்.

அந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சுதீப், உபேந்திரா ஆகியோர் நடித்த போதிலும் எங்களுக்கு அர்ஜூனால் மட்டுமே இது போன்ற பாலியல் தொல்லைகள் நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் படப்பிடிப்புக்கு செல்வதை நிறுத்திக் கொண்டோம்" என்று துணை நடிகை தெரிவித்துள்ளார்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க பாடகி ஒருவரிடம் இசையமைப்பாளர் அனு மாலிக் தவறாக நடந்து கொண்டுள்ளதாக பாலியல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.பாடகி ஒருவர் அனு மாலிக் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

நான் பாடகியான புதிதில் அனு மாலிக்கை சந்தித்தேன். முதல் சந்திப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. இரண்டாவது சந்திப்பில் எனக்கு காதலன் இருக்கிறாரா என்று அவர் என்னிடம் கேட்டார். நான் இல்லை என்றதும் அப்படி என்றால் நீ தனிமையில் இருப்பாயே என்றார். அடுத்த முறை வரும்போது ஷிஃபான் சேலை அணிந்து வா என்றார். நான் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன்.

"நான் புறப்பட எழுந்தபோது அவர் என்னை கட்டிப் பிடித்தார். அப்போது அவர் என் உடல் முழுவதையும் தனது கைகளால் தடவினார். ரெக்கார்டிங் ஸ்டுடியோ என்பதால் நான் அலறினாலும் யாருக்கும் வெளியே கேட்காது. அதனால் அவரை தள்ளிவிட்டு 'என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அவரோ, 'நான் ஒன்றும் செய்யவில்லையே. என் மனைவியுடன் மகிழ்ச்சியாக உள்ளவன் நான்' என்றார்.

ஸ்டுடியோவில் இருந்து வெளியே வந்த பிறகு தான் எனக்கு உயிரே வந்தது. இந்தச் சம்பவம் குறித்து என் தோழி ஒருவரிடம் கூறினேன். அந்தத் தோழி பிரபலமான பாடகரின் மகள். நான் கூறியதை கேட்ட அவர் அதிர்ச்சி அடையாமல் 'அனு மாமா மறுபடியும் ஆரம்பித்து விட்டார்' என்றார். அனு மாலிக் செய்த காரியத்தை என்னால் எப்படி நிரூபிக்க முடியும்? பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டுடியோவில் சிசிடிரி கமரா இல்லை. மும்பையில் தனியாக இருந்த நான் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க விரும்பவில்லை" என்றார் அந்த பாடகி.

அனு மாலிக் மீது ஏற்கனவே 3 பாடகிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தியாகராஜன் மீதும் அவர் இயக்கிய படத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அதேபோல கவிஞர் மற்றும் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி உள்ளிட்டோரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

தியாகராஜன் மீது அவர் இயக்கிய படத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அந்தப் படப்பிடிப்பின் போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், நள்ளிரவில் தனது அறைக் கதவை அவர் தட்டினார் என்றும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...