நம்பிக்ைகயுள்ள கட்சிகள் நீதிமன்றம் செல்லாது | தினகரன்

நம்பிக்ைகயுள்ள கட்சிகள் நீதிமன்றம் செல்லாது

தேர்தலில் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லாது என பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் இணைந்து பொதுத் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளதானது மக்கள் நம்பிக்கை மீது அவர்களுக்குள்ள பயத்தையே வெளிப்படுத்துகின்றது என்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் வெற்றிகொள்ளலாம் என்ற நம்பிக்கையுள்ள எந்தக் கட்சியும் நீதிமன்றத்துக்கு செல்லாது. எனினும் ஐ. தே. கட்சி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளது. தேர்தல் நடப்பதற்கு முன்பதாகவே அக்கட்சி தமது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளது. ஐ.தே.கட்சியானது தொடர்ச்சியாக தேர்தல்களை பின்போட்டு வந்துள்ளது. அக்கட்சியினரின் ஒரேநோக்கம் தேர்தல் நடத்தாது ஒத்திப்போடுவதே. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான நாம் தேர்தலை நடத்துவதிலேயே உறுதியாகவுள்ளோம். தேர்தலொன்று நடத்தப்பட்டால் அதன் பிரதிபலன் எவ்வாறு இருக்குமென எமக்கு தெரியும்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...