உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பு | தினகரன்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பு

பாராளுமன்ற கலைப்பு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அரசியல் தலைவர்கள் மற்றும் சட்டத்தரணிகளிடம் தினகரன் நடத்திய நேர்காணலின்போது தெரிந்து கொள்ள முடிந்தது. அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் நீதிமன்ற தீர்ப்பு பற்றி கூறும் போது நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு தாம் கீழ்ப்படிவதாக குறிப்பிட்டனர். எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி தங்களுக்கு விருப்பமான அரசாங்கமொன்றை தெரிவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அந்த நேர்காணலின்போது அனேகமானோர் குறிப்பிட்டனர்.

நேர்காணலின்போது சிலர் கூறிய கருத்துக்கள் வருமாறு,

தே. சு. முன்னணி தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச

தேர்தலுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்லும் கட்சி உள்ள ஒரே நாடு இலங்கைதான். வங்கி கொள்ளையர்களை விரட்டியடிக்கும் வாய்ப்பை நாம் எதிர்நோக்குகிறோம். அத்துடன் மறைமுகமான எண்ணெய் விலை சூத்திரம் பற்றியும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். எங்கள் எதிர்க் கட்சிகள் இவ்வாறான கீழ் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வருந்தத்தக்கது.

ஸ்ரீல.சு. க பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச

தீர்க்கமான நிலையில் மக்கள் தீர்ப்பை கோருவதற்கான வாய்ப்பு ஜனாதிபதிக்கு உள்ளது. தேர்தல் ஒன்றை நடத்துவது அதில் ஒன்று. ஜனாதிபதி அந்த தீர்மானத்தை எடுத்திருக்கிறார். ஆனால், அது நல்ல தீர்மானம் அல்ல என்று எவரும் நினைப்பார்களேயானால் அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று நீதிமன்றத்தின் கருத்தை தெரிந்துகொள்ள முடியும். வன்முறைகளில் ஈடுபடாமல் நீதிமன்றத்துக்கு செல்வது சிறந்த வழியாகும். எமது முயற்சிகளில் அனைத்திலும் மக்கள் ஆணையே உயர்வானதாகும்.

பிவிதுரு ஹெல உருமய தலைவரும் அமைச்சருமான உதய கம்மன்பில

ஐக்கிய தேசிய கட்சி மக்கள் பயம் உள்ளது. இந்நாட்டில் கடந்த நான்கு வருடங்களாக தேர்தல்களை பின்போட்டு வந்துள்ளனர். எவ்வாறெனினும் இப்போது மக்களுக்கு ஜனாதிபதி ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். இப்போது அதிகாரம் மக்களிடம் இருக்கிறது. ஜனநாயகத்தின் சிறந்த பண்பாடு தேர்தலாகும். தேர்தலை நடத்துவதற்கு எதிராக பலர் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை சமசமாஜக் கட்சிப் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண

ஜனாதிபதியின் முடிவில் குறைகள் இருந்தால் தூதுவராலயங்களுக்கு செல்லாமல் ஐ. தே. க உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 2015ல் நடைபெற்ற தேர்தலில் மக்களின பலத்தை நாம் அறிந்தோம். அத்தேர்தல் பொதுமக்களின் விருப்பமாக அமைந்தது. பாராளுமன்ற தள்ளிவைக்கவும் மீண்டும் கூட்டவும் அதேவேளை கலைக்கவும் அரசியலமைப்பில் இடமுண்டு. உச்ச நீதிமன்றம் நல்லமுடிவை வழங்கும்.

ஸ்ரீல. பொ. பெரமுன பொது செயலளர் சாகர காரியவசம்

ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பபுக்குட்பட்டது. அரசியலமைப்பில் அவருக்கு உள்ள அதிகாரத்திற்கமையவே அவர் அந்த தீர்மானத்தை எடுத்திருக்கிறார். எவ்வாறெனினும் கட்சிகளும் தனிப்பட்டவர்களும் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளதையிட்டு எமக்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை. ஜனாதிபதி அவரது உரிமை வரம்புக்கு உட்பட்டே செயற்பட்டிருக்கிறார் என்பதே எமது நிலைப்பாடாகும்.

சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் டயசிறி

பாராளுமன்றத்தை கலைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்திருக்கிறார். அது தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். அனைத்து தரப்பினரும் மக்கள் கருத்தை எதிர்பார்த்துள்ளனர். மக்கள் இப்போது பொதுத் தேர்தலொன்றை எதிர்பார்த்துள்ளனர். இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்ப்பையே நாம் எதிரபார்க்கிறோம்.

ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத்

பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் தீர்மானத்தால் எமது கட்சியில் உள்ள ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அதனால்தான் நாம் சட்ட நடவடிக்கைக்கு செலல வேண்டியதாகியது.

ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவம்

நாம் நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்திருந்தோம். உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.


Add new comment

Or log in with...