பொது எதிரியை தோற்கடிக்க பாரிய முற்போக்கு கூட்டணி | தினகரன்

பொது எதிரியை தோற்கடிக்க பாரிய முற்போக்கு கூட்டணி

பிரதமர் மஹிந்த தலைமையில் போட்டி; வெற்றி மட்டுமே இலக்கு

பொது எதிரியைத் தோற்கடிக்கும் வகையில் நாட்டை நேசிக்கும் முற்போக்கு சக்திகள் அனைத்தையும் உள்ளடக்கிய பாரிய கூட்டணியொன்றில் தேர்தலை எதிர்கொள்ள விருப்பதாக லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

தற்பொழுது முகங்கொடுத்துள்ள அரசியல் சூழ்நிலையில் கட்சிமாற்றம் தொடர்பான சிறிய சிறிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்போவதில்லையென்றும், கடந்த காலங்களைப் போன்று தம்முடன் இணங்கிச்செல்லக்கூடிய சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து பாரிய கூட்டணியொன்றுக்குச் செல்வது குறித்தே கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே செயலாளர் நாயகம் இதனைக் கூறினார். இதில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் கலந்துகொண்டார்.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை மீண்டும் பிரதமர் வேட்பாளராகக் கொண்டு பாரிய கூட்டணியில் களமிறங்குகிறோம். ஜனவரி 5ஆம் திகதி மக்கள் தமக்கு முழுமையான பெரும்பான்மையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்க வேண்டும் என்பதற்காகவே பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினோம். இதனைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லும் வகையிலேயே தேர்தல் செயற்பாடுகள் இருக்கும் என்றார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல்வேறு கட்சிகளை இணைத்து கூட்டணியாக போட்டியிடுவதையே வழமையாகக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறக்கூடிய தேர்தலில் பொது எதிரியை தோற்கடிக்க பாரிய கூட்டணியொன்று உருவாக்கப்படும். இதில் இடதுசாரி கட்சிகள், முற்போக்கு கட்சிகள் என பலரும் இணைந்துகொள்வார்கள் என பேராசிரியர் குறிப்பிட்டார்.

கட்சிமாறல்கள் என்பன அரசியலில் அவ்வப்போது இடம்பெறும் நிகழ்வுகள். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரின் மகள் கூட கட்சியைவிட்டு விலகி பின்னர் மீண்டும் இணைந்துகொண்டார். இவ்வாறான வரலாறுகள் உள்ள நிலையில் தற்பொழுது இடம்பெறும் கட்சி மாறல்களைப் பரிதாகக் கவனத்தில் கொள்ளப்போவதில்லை. தேர்தலில் வெற்றிபெறுவதற்கே முன்னுரிமை கொடுத்துள்ளோம். கூட்டணியொன்றை அமைப்பது பற்றியும் அதற்கான சின்னம் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் ஒரே நிலைப்பாட்டில் உள்ளவர்கள் என்பதால் அதன் அடிப்படையில் கூட்டணியாகச் செயற்படவுள்ளோம். அடுத்தமுறை எமது கூட்டணி பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார். இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலை தனித்து எதிர்கொள்வதா அல்லது தம்முடன் ஒத்துப்போகக் கூடிய கட்சிகளுடன் கூட்டணியொன்றை அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லையென ஜே.வி.பி தெரிவித்தது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உச்சநீதிமன்றத்தை நாடியிருப்பதால் அதன் தீர்ப்பு வெளியான பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் ஊடகச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...