எதிராக 13 மனுக்கள் தாக்கல் ; விசாரணைகள் நேற்று ஆரம்பம் | தினகரன்

எதிராக 13 மனுக்கள் தாக்கல் ; விசாரணைகள் நேற்று ஆரம்பம்

சட்ட மாஅதிபருக்கு கால அவகாசம் இன்றும் விசாரணை

 பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சிலரால் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் நேற்று உச்சநீதிமன்றத்தில் ஆரம்பமானது.

மேற்படி மனுவின் மூலம் ஜனாதிபதியின் செயற்பாடுகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு போதுமான காலஅவகாசத்தைப் பெற்றுத் தருமாறும் சட்ட மாஅதிபர் ஜயந்த ஜயசூரிய நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிணங்க மேற்படி மனு தொடர்பாக விடயங்களை ஆராய்வதற்கு தீர்மானித்துள்ள நீதிமன்றம் சட்ட மாஅதிபருக்கு அதற்கான கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒன்பதாம் திகதி மேற்கொண்டிருந்தார். அதனை சவாலுக்குட்படுத்தும் வகையில் அடிப்படை உரிமை மனுக்கள் 13 அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரினால் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாஷிம் மாற்றுக் கொள்கைக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, நீதியான சமூகம் தொடர்பான தேசிய அமைப்பின் உறுப்பினர் லால் விஜேநாயக்க, சட்டத்தரணி ஜி. சி. ஜே. பெரேரா, சட்டத்தரணி அருண லக்சிறி, தமிழர் முற்போக்கு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவஹுல், சட்டத்தரணி இந்திக்க கால்லகே, சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு ஆகியோரால் மேற்படி 13 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேற்படி மனுக்கள் மீது விடயங்களை தெரிவிப்பதற்கு அனுமதிகோரி ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன இடைமனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் சில நேற்றுப் பிற்பகல் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி கே. கணேஸ்வரன் விடயங்களைத் தெரிவிப்பதற்கு தயாராகிய நிலையில் நீதிபதியின் சமூகம் தொடர்பில் மேற்படி நீதிபதிகள் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது மேற்படி மனு தொடர்பில் சட்டமா அதிபருக்கும் அழைப்பாணை கிடைத்துள்ளது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லையென நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சே ராஜரட்ணம் தெரிவித்திருந்தார். அவ்வாறு அழைப்பாணை கிடைத்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்கப்பட்டதன் பின் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க முடியும் என அவர் தெரிவித்தார். இதற்கிணங்க மேற்படி மனு மீதான விசாரணை நேற்றைய தினம் இரண்டு மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிணங்க அந்த மனு மீதான விசாரணை பிற்பகல் இரண்டு மணிக்கு நடைபெற்றது. இதன்போது நீதிமன்றத்தில் சமுகமளித்திருந்த சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, மேற்படி மனுமூலம் ஜனாதிபதியின் செயற்பாடுகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதுதொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தமக்கு காலஅவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். மேற்படி மனு தொடர்பான அழைப்பாணை சில நிமிடங்களுக்கு முன்பதாகவே தமக்கு கிடைப்பதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.

இதன்போது நீதிபதிகள் குழாம் மேற்படி மனுவின் அடிப்படையின் பேரிலும் அதன் முக்கியத்துவம் கருதியும் மனுதாரர்களுக்கு விடயங்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இதற்கிணங்க முதலாவதாக மனுதாரர்களுக்கு விடயங்களை முன்வைத்ததற்கு நீதிபதிகள் குழாம் தீர்மானமெடுத்தது. இதற்கிணங்க மனுதாரரான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணேஸ்வரன் விரிவாக விடயங்களை முன்வைத்தார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ காலம் ஐந்து வருடங்களாகும் என்றும் நாலரை வருடத்திற்கு முன்பதாக பாராளுமன்றத்தை கலைக்கவேண்டுமானால் அதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்வது அவசியமென குறிப்பிட்டார். தற்போது அவ்வாறு இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பாராளுமன்றத்தைக் கலைத்தமையானது சட்டவிரோதமானதெனத்தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பாராளுமன்றத்தை கலைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்ற உத்தரவையும் இடைக்கால தடையுத்தரவையும் விடுக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

மற்றுமொரு மனுதாரரான தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பேராசிரியர் ரத்னஜீவஹுல் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தை கலைப்பதற்கான தீர்மானம் சட்டவிரோதமானதெனத் தெரிவித்தார். நீதியான தேர்தலுக்காக உத்தரவாதமளிப்பதென்றால் பாராளுமன்றத்தின் முழுமையான உத்தியோகபூர்வ காலத்தை வழங்கவேண்டும். மக்களின் வாக்குரிமையை பாதுகாப்பதற்காக வாக்குகள் மூலம் நியமிக்கப்பட்டுள்ளோர் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதன்போது சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய மேற்படி கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அதேவேளை தேர்தல் ஆணைக்குழுவின் ஒரு அங்கத்தினரது கருத்தை தேர்தல் ஆணைக்குழுவின் கருத்தாக கவனத்தில் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹஷிம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விரான் கொரயா, லால் விஜேநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ​ெஜயம்பதி விக்கிரமரட்ண, மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ஆஜரான ஜே. சி. வெலிஅமுன ஆகியோர் இங்கு கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அடுத்தகட்ட விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளன.


Add new comment

Or log in with...