Friday, April 19, 2024
Home » பயங்கரவாத தடை சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியது

பயங்கரவாத தடை சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியது

by sachintha
December 7, 2023 10:06 am 0 comment

சபையில் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அது தொடர்பில் ஆட்சியாளர்களை குறை கூற முடியாது என சபையில் குறிப்பிட்ட அவர்,உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு எனினும் தடை செய்யப்பட்ட அமைப்பின் கொடிகள் மற்றும் இலட்சினைகளை அதன் போது பயன்படுத்த எவருக்கும் அனுமதி கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சம்பவத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவ்விடயத்தில் நாம் எதனையும் மேற்கொள்ள முடியாது. இந்த விடயத்தில் பொலிசார் தமது கடமையைச் செய்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ள அமைச்சர்,கைது செய்வதற்கான கட்டளையை எவரும் பொலிசாருக்கு பிறப்பிக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொ ழிப்பதற்கு 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டு குறுகிய காலம் கால அவகாசம் வழங்கப்பட்டது. சகல தரப்பினரதும் ஆலோசனைகளுக்க மைய தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை உருவாக்க முன்வைக்கப்பட்ட சட்ட நகலை ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினார்கள்.

அதேவேளை 2019,ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்ற போது,தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் கடுமையாக பயன்படுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அது தொடர்பில் ஆட்சியாளர்களை குறை கூற முடியாது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ள நிலையில் கடந்த ஆண்டு உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலத்தை நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்.

அந்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பிலுமிருந்து மாறுப்பட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

அந்த நிலையிலேயே அது மீள பெற்றுக் கொள்ளப்பட்டது.

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டு அவர்களின் நிலைப்பாட்டையும் பெற்றுக்கொண்டுள்ளோம்..எதிர்வரும் மாதமளவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.ஆனால் அவரை கொலை செய்ய முயற்சித்தவர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT