பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள் | தினகரன்

பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்

பாராளுமன்ற கலைப்பு; எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்-FR Petition Against Parliament Disslove

உச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணை

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று (12) முதல் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்  ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (12)  காலை முதல் பத்திற்கும் மேற்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த மனுக்களை விசாரிக்க, பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான  மூவர் அடங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளன.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனவும் அது அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும் தெரிவித்து குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறும் அவர்கள் அதில் கோரியுள்ளனர்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, சட்டமா அதிபர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஆயினும் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பின் 33 வது உறுப்புரை (2) (இ) உப உறுப்புரை மற்றும் அரசியலமைப்பின் 62 (2), 70 (5) ஆகிய உறுப்புரைகள் மற்றும் 1981 ஆம் ஆண்டின் 01 இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவுகளின் ஏற்பர்டுகளுக்கு அமைய, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த நவம்பர் 09 ஆம் திகதி 2096/70 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...