Thursday, March 28, 2024
Home » வளிமண்டலவியல் திணைக்களத்தை நவீனமயப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

வளிமண்டலவியல் திணைக்களத்தை நவீனமயப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

by sachintha
December 7, 2023 8:16 am 0 comment

 

உலக வங்கியின் நிதியுதவியுடன் வளிமண்டலவியல் திணைக்களத்தை நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காலநிலை தொடர்பான அறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகளை உரிய முறையில் வெளிப்படுத்தும் வகையில் “ட்ரொப்லர் ரேடா” கருவி ஒன்றை புத்தளம் பிரதேசத்தில் ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், மதுர விதானகே எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எமது நாடும் தொடர்ந்து எதிர் கொண்டு வருகிறது. அதேவேளை மனிதர்களினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகளும் இடம் பெறுகின்றன. அந்த வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தொழில்நுட்ப ரீதியில் நாம் 25 வருடங்கள் பின்னடைவு நிலையிலேயே உள்ளோம். காலநிலை தொடர்பான தகவல்களை சிறந்த வகையில் வெளிப்படுத்துவதே எமது நோக்கம். அந்த வகையில் உலக வங்கியில் நிதியுதவியுடன் வளிமண்டலவியல் திணைக்களத்தை நவீனமயப்படுத்தும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

உலகளவில் தொழில்நுட்ப நிபுணத்துவ அனுபவத்தை பெற்றுள்ள ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்கான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சூழல் மாசு தொடர்பில் திருப்தியடையக்கூடிய நிலைமை காணப்படவில்லை என்பதையே அதன் அறிக்கைகள் எமக்கு தெரிவிக்கின்றன. அது தொடர்பில் பிராந்திய ரீதியான தீர்வு ஒன்றை நாம் பெற்றுக் கொள்ள வேண்டி யுள்ளது. அதற்காக ஜனாதிபதி உரிய கவனம் செலுத்தியுள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT