Wednesday, April 24, 2024
Home » பௌத்தர்களின் உற்ற நண்பர்களாக இருக்கவே தமிழர் விரும்புகின்றனர்

பௌத்தர்களின் உற்ற நண்பர்களாக இருக்கவே தமிழர் விரும்புகின்றனர்

by sachintha
December 7, 2023 7:59 am 0 comment

சபையில் செல்வராசா கஜேந்திரன் எம்.பி

 

தமிழர்கள் பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. சிங்கள மக்களின் உண்மையான நண்பர்களாகவே வாழ விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார்.

நாம் பௌத்த மதத்தை நேசிக்கிறோம். பௌத்த மக்களை நேசிக்கின்றோம்.பௌத்தர்களின் உண்மையான நண்பர்களாக இருக்கவே விரும்புகிறோம். நாம் ஒருபோதும் பௌத்தத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அவர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, காணி சுற்றுலாத்துறை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

விடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட வடக்கு கிழக்கில் புராதன பௌத்த நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. எந்த சந்தர்ப்பத்திலும் பௌத்த விகாரைகள் சேதமாக்கப்படவில்லை.

எனினும், யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் தொல்பொருள் இடங்களை திரிபுபடுத்தி பௌத்த அடையாளங்களாக சித்தரிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவை பௌத்த அடையாளங்களாக இருந்திருந்தால் அது பௌத்த இடங்களாக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர, அவற்றை திரிபு படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வகையில் குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும். தையிட்டியில் தனியார் காணி அபகரிக்கப்பட்டு, கட்டப்பட்டுள்ள விகாரை அகற்றப்பட வேண்டும். மாங்குளத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை அகற்றப்பட வேண்டும். குருந்தூர் மலையில் ஆதி சிவனார் ஆலயத்தில் தமிழ் மக்கள் ஒரு பொங்கல் வைக்கக் கூட முடியாமல் உள்ளது. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அங்கு தகரம் ஒன்றை வைத்துதான் பொங்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள். அப்படியானால் தமிழர்களுக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா? நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று 15 வருடங்களாகியும் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற இது போன்ற நடவடிக்கைகள்தான்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT