Home » லண்டனில் நெடுங்கேணி கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஆண்டுவிழா

லண்டனில் நெடுங்கேணி கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஆண்டுவிழா

by sachintha
December 7, 2023 2:50 am 0 comment

கல்வி வளர்ச்சிக்கு வழங்கிவரும் ஆதரவுக்கு பலரும் பாராட்டு

‘நெடுங்கேணி பிரதேசக் கல்வி அபிவிருத்திச் சங்கம் கடந்த ஆறு ஆண்டுகளாக அப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியன. பிரித்தானியாவில் வாழும் நெடுங்கேணி பிரதேச மக்களும் ஏனைய நலன்விரும்பிகளும் ஒருங்கிணைந்து, தாயகத்தில் தம் பிரதேச நலனை முன்னெடுப்பதில் காண்பித்து வரும் அக்கறையைப் பாராட்டுகிறேன். கடந்த இருபது ஆண்டுகளாக பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றி வரும் அனுபவத்திலிருந்து, நெடுங்கேணி பிரதேசத்தின் சுகாதார, மருத்துவ வசதிகளிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன்.’

இவ்வாறு கடந்த லண்டன் உயற்குன்று முருகன் ஆலய மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்ற நெடுங்கேணி கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய வைத்திய கலாநிதி ஜெய்சன் விவேகானந்தராஜா தெரிவித்தார்.

‘முப்பது ஆண்டுகால யுத்தத்தால் பேரிழப்புகளைச் சந்தித்த நெடுங்கேணி பிரதேசம் இன்று சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது. கல்வி, தொழில், குடும்பநலன் போன்ற விடயங்களில் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை மேற்கொள்ள பிரித்தானியாவாழ் நெடுங்கேணி பிரதேச நலன்விரும்பிகள் ஒன்றிணைந்து உதவ முன்வர வேண்டும்’ என்று நெடுங்கேணி பிரதேசக் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாள செ.கருணாகரன் தனதுரையில் வேண்டுகோள் விடுத்தார்.

‘நெடுங்கேணி பிரதேசத்தின் ஆரம்பநிலைக் கல்வியை முன்னேற்றும் செயற்பாடுகளிலும் ஆங்கிலமொழி அறிவினை மேம்படுத்தும் திட்டத்திலும் சில அடிப்படைச் செயற்பாடுகளில் ஒத்துழைப்பினை வழங்குவோம்’ என்று வடமாகாண முன்பள்ளிச் சம்மேளனத்தின் இயக்குனர் சச்சிதானந்தன் தெரிவித்தார்.

நெடுங்கேணி மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கக் காப்பாளர் திருமதி தமிழரசி அன்பழகன் ‘நெடுங்கேணி இளங்கதிர் 2023’ ஆண்டுமலரை அறிமுகப்படுத்தி உரையாற்றியபோது, ‘கடந்த ஆண்டு நெடுங்கேணி மகாவித்தியாலத்திலிருந்து பதினொரு மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லுமளவிற்கு எங்கள் பாடசாலை வளர்ந்து வருவதில் நாம் பெருமை அடைகிறோம். நெடுங்கேணியுடன் ஊஞ்சார்கட்டி, மருதோடை, பழம்பாசி, ஆயிலடி ஆகிய கிராமப் பாடசாலைகளின் வளர்ச்சியிலும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். பல்கலைக்கழகத்தில் நமது மாணவர்கள் உயர்கல்வியைத் தொடரவும் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கவும் எமது சங்கம் உதவி வருகிறது’ என்று குறிப்பிட்டார்.

நெடுங்கேணி பிரதேசக் கல்வி அபிவிருத்திச் சபை ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி கலாநிதி ச.பரமலிங்கம் ஆண்டுமலரை வெளியிட்டுவைத்துப் பேசுகையில், ‘வவுனியா வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் எழுபது ஆயிரம் ஏக்கர் நிலத்தை கரும்புப் பயிர்ச் செய்கைக்காக கம்பெனிகளுக்குக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதற்கான செய்திகள் எமக்கு கவலை அளித்தன’ என்று தெரிவித்தார்.

‘கலைவளம் மிக்க வன்னிப் பிரதேசத்தின் வாய்மொழி வழக்காறுகள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று திருமதி சுகந்தி தமிழ்வாணன் குறிப்பிட்டார்.

இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் ‘நெடுங்கேணி இளங்கதிர் 2023’ ஆண்டுமலரை மதிப்பீடு செய்து உரையாற்றுகையில், ‘சிறந்த ஆய்வேடாகவும், குரலற்றோர் குரலாகவும், நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் செயற்பாட்டுத் தளமாகவும் திகழும் இம்மலர் பேராசிரியர் இர.சிவச்சந்திரன், கலாநிதி ச.பரமலிங்கம், கலாநிதி பாலசுந்தரம் இளையதம்பி, நெடுங்கேணி சானுஜன், திருமதி விமலா ரவீந்திரன், சுகந்தி தமிழ்வாணன் ஆகியோரின் தரமான ஆக்கங்களைத் தாங்கி வெளிவந்திருப்பது சிறப்புக்குரியது. பின்தங்கிய பிரதேசம் ஒன்றின் மேம்பாட்டுக்காக பிரித்தானியாவாழ் நெடுங்கேணி மக்கள் காட்டிவரும் அக்கறை பாராட்டுக்குரியது’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT