Thursday, March 28, 2024
Home » அரச பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர்களை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தி சஜித் மோசடி

அரச பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர்களை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தி சஜித் மோசடி

by sachintha
December 7, 2023 6:39 am 0 comment

அரசுக்கு ரூபா 42 மில்லியன் நஷ்டம்: பதவி விலக வேண்டும்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தபோது, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த பத்தொன்பது பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தனது தனிப்பட்ட பணிகளுக்காக பயன்படுத்தியதால், அரசாங்கத்துக்கு ரூபா 42 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உள்ளக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கணக்காய்வு அதிகாரி என்.வி.டி தம்மிகவின் கையொப்பத்துடன் 2020 இல் வெளியாகியிருந்ததாக சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே இது உண்மையெனில் சஜித் பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த 19 பேரையும்,தனது பாதுகாப்பு பணிகளுக்காகவும், அரசியல் பணிகளுக்காகவும் தனது மனைவியின் அழகு நிலைய பணிகளுக்காகவும் சஜித் நியமித்ததாகவும் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளிக்கையில், கணக்காய்வு அறிக்கையை சபைக்கு சமர்ப்பியுங்கள். அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தால், நான் உடனடியாக பதவி விலகுவேன் என்றார். இதன்போது மஹிந்தானந்த எம்.பி. தனது கையில் இருந்த ஆவணத்தை எடுத்துக்காட்டி இதோ, அமைச்சின் உள்ளக கணக்காய்வு அறிக்கை என்னிடம் உள்ளது. இதனை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். நீங்கள் தெரிவித்ததுபோல் தற்போது உடனடியாக பதவி விலகவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில், பத்து பில்லியன் ரூபா நிதியை முறைகேடாக உபயோகித்துள்ளதாக குறிப்பிடும் கணக்காய்வு அறிக்கை உண்மையானதல்ல. இதனை உறுதிப்படுத்துமாறு சவால் விடுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே எம்பியிடம் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று காணி,சுற்றுலாத்துறை, புத்தசாசனம் மற்றும் கலாசார அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே, மஹிந்தானந்த அளுத்கமகே எம்பி இவ்வாறு தெரிவித்தார். மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் மஹிந்தானந்த அளுத்கமகே எம்பிக்குமிடையில் நேற்று சபையில் வாக்குவாதம் இடம்பெற்றது. இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT