ஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது | தினகரன்

ஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

வெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்தனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்த 58 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து சுமார் ஒரு கோடியே 9 இலட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான வெளிநாட்டு கரன்ஸிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் எஸ்.கியு 469 என்ற விமானம் மூலம் சிங்கப்பூரை நோக்கி பயணிப்பதற்காக விமான நிலையம் வந்தடைந்த நபரிடமிருந்தே மேற்படி வெளிநாட்டு கரன்ஸிகள் கைப்பற்றப்பட்டன. இவரிடமிருந்து 50 ஆயிரம் யூரோக்கள், 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மற்றும் 149 சிங்கப்பூர் டொலர்கள் ஆகியனவே மீட்கப்பட்டுள்ளன.

சுங்க அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சுங்க அதிகாரிகளான ஸ்டான்லி சேனாரட்ண, எம்.ஏ. கருணாரட்ண, கே.எச். தர்மகீர்த்தி, யூ.கே.அசோக்க ரஞ்சித், சேனக்க அரவபொல ஆகியோர் இந்த விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...