Friday, March 29, 2024
Home » பந்தை கையால் தட்டி ஆட்டமிழந்தார் முஷ்பீக்

பந்தை கையால் தட்டி ஆட்டமிழந்தார் முஷ்பீக்

by sachintha
December 7, 2023 8:24 am 0 comment

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் வீரர் முஷ்பீகுர் ரஹிம் மிக அரிதான முறையில் களத்தடுப்பை தடுத்ததற்காக ஆட்டமிழப்புச் செய்யப்பட்டார்.

மிர்பூரில் ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணிக்காக 5ஆவது வரிசையில் வந்த முஷ்பீகுர், 41 ஆவது ஓவரை எதிர்கொண்டபோது இந்த ஆட்டமிழப்புக்கு முகம்கொடுத்தார்.

கைல் ஜெமிசன் வீசிய பந்துக்கு தடுத்தாடிய முஷ்பீகுர் துடுப்பில் பட்டு துள்ளிச் சென்ற பந்து விக்கெட்டுக்கு செல்லாமல் இருக்க இடது கையால் தட்டிவிட்டார். இதனை அடுத்து நியூசிலாந்து அணி களத்தடுப்பை தடுத்ததற்காக ஆட்டமிழப்புக் கோரியது. தொடர்ந்து இதனை ஆராய்ந்த மூன்றாவது நடுவர் முஷ்பீகுர் ரஹிமுக்கு ஆட்டமிழப்பு வழங்கினார்.

இதன்படி டெஸ்ட் வரலாற்றில் களத்ததடுப்பை தடுத்ததற்காக ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட இரண்டாவது வீரராக முஷ்பீகுர் பதிவானார். இதற்கு முன்னர் 1951 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் எல். ஹட்டன் இந்த முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இவ்வாறான ஆட்டமிழப்பு முறை ஆறு தடவைகளும் டி20 சர்வதேச போட்டிகளில் ஒரு முறையும் நிகழ்ந்துள்ளன.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 172 —- ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. முஷ்பீகுர் ரஹிம் பெற்ற 35 ஓட்டங்களுமே அதிகபட்சமாக இருந்தது.

ஏற்கனவே சில்ஹெட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்ற நிலையில் தொடர் வெற்றியை எதிர்பார்த்தே அந்த அணி இரண்டாவது டெஸ்டில் களமிங்கியுள்ளது. தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு நியூசிலாந்து இந்தப் போட்டியில் வெற்றியீட்டுவது கட்டாயமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT