எதிர்பார்ப்புடன் கூடும் பாராளுமன்ற பரபரப்பு அமர்வு | தினகரன்

எதிர்பார்ப்புடன் கூடும் பாராளுமன்ற பரபரப்பு அமர்வு

இலங்கை பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆந் திகதி புதன்கிழமை கூடும் போது அனைவரின் பார்வையும் பாராளுமன்றத்தை பார்த்துக் கொண்டவகையில்தான் இருக்கப் போகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை, கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதியினால் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்தே தோன்றியது. அதேநேரம், பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்கவை அவரது பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் நாட்டின் பிரதமர் இன்னும் தான்தான் என்று ரணில் விக்கிரமசிங்க கூறி வருகிறார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டம் திருத்தப்பட்டுள்ளதையடுத்து பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாகவேயன்றி ஜனாதிபதி வேறு வகைகளில் பிரதமரை நீக்க முடியாது என்று அவர் கூறி வருகிறார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அடுத்த நாளே ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததால் அரசியல் நெருக்கடி நீடித்து வருகிறது.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டதால் அவரது அமைச்சரவையும் முழுமையாக பதவி இழந்து விட்ட நிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாள்தோறும் பதவியேற்று வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த வடிவேல் சுரேஷ், ஆனந்த அளுத்கமகே ஆகியோர் மஹிந்த தரப்புக்கு மாறி இராஜாங்க அமைச்சர் பதவிகளையும் பெற்றனர். அதற்கடுத்து இரத்தினபுரி மாவடட் ஐ. தே. க. உறுப்பினர் துனேஷ் கந்கந்த, எஸ். பி. நாவின்ன, தமிழர்க் கூட்டமைப்பின் வியாழேந்திரன் என்று வரிசை காட்டி புதிய அரசாங்கத்துடன் இணைந்தனர்.

இதனையடுத்து கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் அமைச்சர்களாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ முதலிலேயே பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிலையில் தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, கெஹெலிய ரம்புக்வெல்ல, அசோக்க பிரியந்த, சுசில் பிரேம்ஜயந்த், பந்துல குணவர்த்தன, சி. பி. ரத்னாயக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா, சாலிந்த திசாநாயக்க என்று அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் சத்தியப் பிரமாணம் தொடர்ந்தது.

இந்த நிலையில், பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை முறையே பத்தரமுல்லை, கொள்ளுப்பிட்டி மற்றும் நுகேகொடையில் பொதுக்கூட்டங்களை நடத்தின. தங்கள் நிலைப்பாட்டை அவை மக்களுக்கு விளக்கிக் கூறின. மேற்படி மூன்று கூட்டங்களுக்கும் கூட்டம் வந்திருந்ததை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

முன்னாள் எரிபொருள் துறைக்கான அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வருகை தந்த போது இடம்பெற்ற சம்பவத்தின் போது அமைச்சரின் மெய்ப்பாதுகாப்பாளர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, அர்ஜுன கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இப்போது விசாரணை நடைபெறுகிறது. இந்த ஒரு சம்பவம் மட்டுமே தற்போதைய அரசியல் நெருக்கடியின்போது பாரதூரமாக அமைந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தியிருந்தார். பாராளுமன்றம் 7ஆம் திகதி கூட்டப்படும் என்று ஜனாதிபதி முதலில் சபாநாயகரிடம் கூறியிருந்தார். பின்னர் இது ஒருவாரத்தின் பின்னர் எதிர்வரும் 14ஆம் திகதி கூட்டப்படும் என்று வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது பெரும்பான்மையை நீருபித்துக்காட்டும் வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னர் இருந்த நிலைதான் இடம்பெறும் என்று கூறியுள்ளார்.

எனினும், பாராளுமன்றத்தைக்கூட்டவும் கலைக்கவும் ஜனாதிபதிக்கே அரசியலமைப்பின்படி அதிகாரம் இருக்கும் நிலையில் சபாநாயபரின் செயற்பாடு மற்றுமொரு சிக்கலுக்கு வழி வகுத்திருக்கிறது.

பாராளுமன்ற உத்தியோகத்தர்களே சபாநாயகரின் செயற்பாட்டுக்கு எதிராக உள்ளனர். வர்த்தமானி அறிவிப்பின்படியே செயற்படப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவுக்கு அங்கிருந்து தாவி புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியொன்றை பெற்றுக்கொள்ளுமாறு தனக்கு இலஞ்சம் தர முயன்றதாகக் கூறப்பட்ட ஒலிப்பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட நிலையில் இந்த விவகாரம் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

எதிர்வரும் 14ஆம்திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு இன்னும் ஒரு வாரத்துக்கு குறைந்த காலமே இருக்கும் நிலையில், அன்றைய தினம் நாம் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் அங்கு இடம்பெறக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

லக்தேவ் லியனகம


Add new comment

Or log in with...