Saturday, April 20, 2024
Home » ஆசிய கிண்ணத் தொடரில் பங்கேற்க இலங்கை இளையோர் அணி பயணம்

ஆசிய கிண்ணத் தொடரில் பங்கேற்க இலங்கை இளையோர் அணி பயணம்

by sachintha
December 7, 2023 6:12 am 0 comment

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை இளையோர் அணி நேற்று (06) காலை புறப்பட்டுச் சென்றது.

பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் என 27 பேர் கொண்ட குழு ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி பயணித்ததோடு இதில் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் குழாத்திற்கு கொழும்பு, றோயல் கல்லூரியின் சினெத் ஜனவர்தன தலைவராக செயற்படுகிறார்.

19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணத் தொடர் நாளை (08) ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் இந்தியா மற்றும் 2017 ஆம் ஆண்டு சம்பியனான ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

கடந்த நவம்பர் 10 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் தடை விதித்த நிலையில் இலங்கை அணி ஒன்று சர்வதேச போட்டி ஒன்றில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது. எனினும் இலங்கை அணிக்கு சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு ஐ.சி.சி. அனுமதி அளித்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்தத் தடையால் 2024 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டியை நடத்தும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தது. இந்த போட்டிகளை நடத்தும் வாய்ப்பு தென்னாபிரிக்காவுக்கு வழங்கப்பட்டது.

எட்டு அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணத் தொடரில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை இளையோர் அணி முதல் போட்டியில் வரும் சனிக்கிழமை ஜப்பான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்து டிசம்பர் 11 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தையும், டிசம்பர் 13 ஆம் திகதி பங்களாதேஷ் அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறவுள்ளன.

கடந்த மாதம் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை இளையோர் அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 3–2 என வெற்றியீட்டிய நிலையிலேயே ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணி இதுவரை ஐந்து முறை இறுதிப் போட்டிவரை முன்னேறியபோதும் ஒரு முறை கூட சம்பியன் கிண்ணத்தை வென்றதில்லை.

இதுவரை நடந்த 10 ஆசிய கிண்ணத் தொடர்களிலும் ஒன்பது முறைகள் இந்தியாவே கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இளையோர் குழாம்: சினெத் ஜயவர்தன (தலைவர்), மல்ஷ தருப்பத்தி (உப தலைவர்), புலிந்து பெரேரா, விஷேன் ஹலம்பகே, ரவிஷான் டி சில்வா, ஷரூஜன் ஷன்முகநாதன், தினுர களுபஹன, விஹாஸ் தெவ்மிக்க, விஷ்வ லஹிரு, கருக்க சங்கேத், துவிந்து ரணதுங்க, ஹிருன் கப்புருபண்டார, ருசந்த கமகே, தினுக்க தென்னகோன், ருவிஷான் பெரேரா.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT