யெமனின் தீர்க்கமான ஹுதைதா துறைமுக நகரில் மோதல் தீவிரம் | தினகரன்

யெமனின் தீர்க்கமான ஹுதைதா துறைமுக நகரில் மோதல் தீவிரம்

யெமன் துறைமுக நகர் ஹுதைதாவில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையின் வான் தாக்குதலின் ஆதரவுடன் அரச படை கிளர்ச்சியாளர் நிலைகளை நோக்கி முன்னேறும் நிலையில் அங்கு மோதல் உக்கிரமடைந்துள்ளது.

இந்த நகரின் புறநகர் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் துருப்புகள் மற்றும் போராளிகளுக்கு இடையில் தொடரும் தரைவழி மோதல்களில் 150க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் மருத்துவ வசதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஐ.நா மற்றும் உதவி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

பஞ்சத்திற்கு முகம்கொடுத்திருக்கும் மில்லியன் கணக்கான யெமன் மக்களுக்கு உயிர் காக்கும் பகுதியாக ஹுதைதா துறைமுகம் உள்ளது.

இந்த துறைமுகம் ஊடாகவே 80 வீதமான மனிதாபிமான விநியோகங்கள் மற்றும் வர்த்தகப் பொருட்கள் நாட்டுக்குள் வருகின்றன. இந்த துறைமுகம் சேதமடைந்தால், அழிக்கப்பட்டால் அல்லது தடுக்கப்பட்டால் ஏற்படும் பேரழிவு ஒன்று பற்றி ஐ.நா அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஹூத்தி ஷியா கிளர்ச்சியாளர்கள் மேற்கு யெமனின் கணிசமான பகுதியை கைப்பற்றி, ஜனாதிபதி அப்த்ரப்பு மன்ஸுர் ஹதி தலைநகர சனாவை விட்டு வெளியேறிய நிலையில் யெமனில் 2015 ஆம் ஆண்டு அரபு நாடுகள் தலையிட்டதை அடுத்து அங்கு மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டது.

இந்த யுத்தத்தால் குறைந்தது 6,660 பேர் கொல்லப்பட்டு மேலும் 10,560 பேர் காயமடைந்திருப்பதாக ஐ.நா குறிப்பிடுகிறது.

இந்நிலையில் ஹுதைதாவில் கடந்த ஜுன் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைமையில் தாக்குதல்கள் ஆரம்பமாயின.

ஆரம்பத்தில் அரச ஆதரவுப் படை வேகமாக முன்னேறி நகரின் தெற்கு புறநகர் மற்றும் விமானநிலையத்தை கைப்பற்றியது. எனினும் கிளர்ச்சியாளர்களின் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் நிலைகொண்டிருக்கும் நகரின் மையப்பகுதியை நோக்கி அந்தப் படை முன்னேறவில்லை.

இந்நிலையில் அரபு கூட்டுப்படைக்கு ஆயுத மற்றும் மூலோபாய உதவிகளை வழங்கும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் யெமனில் அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்தே இந்த நகரில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மாத்திரம் ஹுதைதா நகரில் சுமார் 200 வான் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

விமானநிலையத்தை சுற்றிய பகுதிகள், நகரின் கிழக்குப் பகுதி மற்றும் மேற்கில் பல்கலைக்கழகத்திற்கு அருகில் மோதல் தீவிரம் அடைந்திருப்பதாக உதவிப் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...