அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளருடன் வாக்குவாதம் | தினகரன்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளருடன் வாக்குவாதம்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர் ஒருவருடன் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி அந்த செய்தியாளருக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின் போது சி.என்.என் தொலைக்காட்சியின் செய்தியாளர் அகோஸ்டா, ஆயுதங்கள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வருபவர்களை எப்படி ஊடுருவல்காரர்கள் என்று கூற முடியும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த டிரம்ப், தன்னை அமெரிக்காவை ஆட்சி செய்ய விடுமாறு செய்தியாளரிடம் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர் கேள்வி எழுப்ப முயன்றார்.

இதனால் கோபம் அடைந்த டிரம்ப், கேள்வி எழுப்பியது போதும் அமருமாறு செய்தியாளர் அகோஸ்டாவை வலியுறுத்தினார். ஆனால் அகோஸ்டா தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றதால் ஒரு கட்டத்தில் பதில் அளிக்க மறுத்து டிரம்ப் நகர்ந்து சென்றார்.

பின்னர் திரும்பி வந்த டிரம்ப் செய்தியாளர் அகோஸ்டாவை பார்த்து மக்களின் எதிரி என்று விமர்சித்தார்.


Add new comment

Or log in with...