கனிஷ்ட ஒலிம்பிக் போட்டியில் வென்ற ஹஸினிக்கு இராணுவத் தளபதி பாராட்டு | தினகரன்

கனிஷ்ட ஒலிம்பிக் போட்டியில் வென்ற ஹஸினிக்கு இராணுவத் தளபதி பாராட்டு

ஆர்ஜன்டீனாவின் தலைநகரான பியனோஸ் அயர்ஸில் கடந்த செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற கனிஷ்ட ஒலிம்பிக் பெட்மின்டன் சுற்றுப்போட்டியின் தொடர் நிகழ்ச்சியில் முதல் முறையாக இலங்கைக்கு தங்கப்பதக்கமொன்றை வென்று கொடுத்த ஹஸினி நுஷாகா அம்பலங்கொடகே இராணுவ தளபதியை இராணுவத் தலைமையகத்திலுள்ள அவரது அலுவலகத்தில் கடந்த முதலாம் திகதி சந்தித்துப் பேசினார்.

இலங்கையின் சார்பாக மேற்படி சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய நுஷாகா அம்பலங்கொடகே இறுதிப் போட்டியில் 5 நாடுகளின் வீராங்கனைகளுடன் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி ஜுனியர் ஒலிம்பிக் பெட்மின்டன் சுற்றுப்போட்டியில் மொத்தம் 32 நாடுகளில் இருந்து வீராங்கனைகள் போட்டியிட்டிருந்தனர்.

சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்கு அவருக்கு பல இடைஞ்சல்கள் ஏற்பட்டிருந்த நிலையில் இராணுவ விளையாட்டு சபையின் வழிகாட்டியான லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கவின் உதவி மூலம் அந்த இடைஞ்சல்களை அவர் எதிர்கொள்ள முடிந்திருந்தது.

அத்துடன் தேசிய விளையாட்டு தெரிவுக்குழுவின் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க பதவியிலிருந்ததும் அவர் இந்த வெளிநாட்டு சுற்றுப்போட்டியில் பங்குபற்ற பெரிதும் உதவியிருந்தது.

தங்கப்பதக்கத்தை வென்ற ஹஸினி நுஷாகா அம்பலாங்கொடகே விசாகா கல்லூரியின் பழைய மாணவியாவார்.


Add new comment

Or log in with...